இந்தியாவிற்கு வெளியே உள்ள 5 புகழ்பெற்ற சிவன் கோயில்கள்

சிவபெருமானுக்கான கோவில்கள் நம் நாட்டில்தான் மிகவும் அதிகம். ஆனால், நம்முடைய நாட்டை தாண்டி மேலும் பல நாடுகளில் சிவபெருமானுக்கு கோவில்கள் உள்ளன. அப்படி நமது நாட்டைத் தாண்டி வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற 5 சிவன்கோவில்கள் பற்றி  இருக்கின்றன.

1. பசுபதி நாத் கோவில்: நேப்பாள நாட்டிலுள்ள காத்மாண்டுவில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலானது உலகிலுள்ள மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாகும். பாக்மதி ஆற்றின் கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது . இங்குள்ள மூலவர் பசுபதிநாதர் . இந்த கோவில் அரசன் இரண்டாம் ஜெயதேவனால் கி.பி 753 இல் கட்டப்பட்டது. கோவிலுனுள் 1 மீட்டர் உயரத்தில் லிங்கம் உள்ளது. கோவிலானது கனசதுர வடிவில் மரங்களைக் கொண்டும் தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டும் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் நான்கு முதன்மை வாயில்களைக் கொண்டுள்ளது. இவ்வாயில்கள் அனைத்துமே வெள்ளியால் செய்யப்பட்டவையாகும். கோவிலின் மேல் ஒரு தங்கத்தால் ஆன கலசம் உள்ளது. பசுபதிநாத் சிலையானது ஆறடி உயரத்தில் ஆறடி சுற்றளவில் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கிறது.

2. பிரம்பனன் கோவில்: இந்தோனேசியாவின் ஜாவா என்னும் இடத்தில் உள்ள இந்த கோவிலானது முக்கடவுளான சிவன், பிரம்மா, விஷ்ணுவிற்காக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் 9  ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது . சிவனின் ஆலயம் ஐந்து பகுதிகளுடன் உள்ளது. நடுவில் ஒரு பகுதியும், நான்கு திசைகளில் நான்கு பகுதிகளும் கொண்ட இது மிகவும் பெரியது. 47 மீட்டர் உயரமும், 34 மீட்டர் அகலமும் உடையது. மூன்று மீட்டர் உயர சிவன் சிலை கொண்ட கிழக்கு பகுதி, மத்திய பகுதியுடன் இணைக்கப் பட்டுள்ளது. மற்ற மூன்று பகுதிகளிலும் துர்க்கை, ரிஷி அகஸ்தியர் கணேசன் ஆகியோரின் சிலை உள்ளது. பிரம்மா கோவிலில் பிரம்மாவின் சிலையும், விஷ்ணு கோவிலில் விஷ்ணுவின் சிலையும் உள்ளது. இவ்விரண்டு கோவிலும் 33 மீட்டர் உயரமும், 2௦ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

3. கடஸ்ராஜ் கோவில்: பாக்கிஸ்தானில் உள்ள லாகூருக்கு அருகிலுள்ள பஞ்சாப் மாநிலத்திலுள்ள சக்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் மகாபாரத காலத்திலிருந்தே இருந்துள்ளது. இது ஒரு சிவன் கோவில். அதை ஒட்டியுள்ள புனித கோவிற்குளம் தன் மனைவியின் இழப்பை ஒட்டிச் சிவன் உதிர்த்த கண்ணீர்த் துளிகளால் உருவானது என்பது நம்பிக்கை. ஏழு சிறு கோவில்கள் இங்கு உண்டு.

4. முன்னேஸ்வரம் கோயில்: முன்னேசுவரம் அல்லது முன்னேஸ்வரம் என அழைக்கப்படும் இந்த கோவில் இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் ஒன்று. இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்தில் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற நகரில் இருந்து கிழக்கே, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சிலாபம்-குருநாகல் வீதியில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் அழைக்கப்படுகிறது. வேறெந்த ஆலயத்திலும் இல்லாதவாறு இங்கு திருவிழாக் காலத்திலே தினமும் காலையும் மாலையும் சோமஸ்கந்த மூர்த்தத்தின் வீதியுலா இடம்பெறும்

5. அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில்: ஆயிரக்கணக்கான கண்ணாடித் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவில் பார்க்கவே படு பிரமிப்பாக உள்ளது. பளபளப்பாகவும், ஜொலி ஜொலிப்பாகவும் காணப்படும் இந்த வித்தியாசமான கோவில், மலேசியாவின் ஜோகூர் பாரு மாநிலம், ஜாலான் தெப்ராவ் என்ற இடத்தில் உள்ளது. 1922 இல் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சிவபெருமான் வீற்றிருக்கும் மண்டப விதானத்தில் 3,00,000 ருத்ராக்ஷ மணிகள் பதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here