மீண்டும் வேலைக்குப் போகலாம்

அலசுகிறார் பெஞ்ச் பெரியசாமி

-மீட்சிகாகவே போராடலாம்

கொரொனா என்ற சொல் மலேசியாவுக்குப் புதிதல்ல . 1968களில் கொரொனா என்ற ஜப்பானிய கார் அதிகமாக ஓடின என்பதை பலர் மறந்திருக்கலாம்.

அப்போதெல்லாம் கூடல் இடைவெளி இல்லாமல் தோட்டப்புற மக்களை வாரி போட்டுக்கொண்டு சவாரிக்குக் கள்ள டாக்சிகளாக பயன்பட்டன. அப்போதெல்லாம் கொரோனா கார் பல வகையிலும்  உதவியிருக்கிறது என்பதை நன்றியோடு நினைத்துப்பாரக்க்கும்போது இன்றைய கொரோனாவுக்கு என்ன அப்படியொரு பழிவாங்கும் உணர்வு என்று சிந்திக்காமல் இருக்க முடியாது.

அன்று, ஒரே காரில், மூச்சு விட முடியாமல் அடைத்துக்கொண்டு போக கொரோனா பெரிதும் உதவியிருக்கிறது. இன்று அப்படிச்செய்ய முடியுமா? 

கொரொனாவின் வேகம் உலக நாடுகளை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டிருக்கும்போது மலேசியா சமாளிக்கிறது என்பது மிகப்பெரிய சாணக்கியம்.

கடந்த ஒராண்டுக்குப்பிறகு கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும் அதன் அச்சம் நீங்கவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டும் தள்ளாடியும் வணிகத்தில் பெயர்போட்டுக்கொண்டிருக்கின்றன. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உண்னும் உணவகங்கள் கூட அதிக ஓய்வைத்தேடிகொண்டன. புத்திசாலி நிறுவனங்கள் பல  வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

இன்றைய வாழ்க்கைமுறை மனிதனை முற்றிலும் திருப்பிப் போட்டிருக்கின்றது. கொரோனா , கோவிட் இரண்டையும் உச்சரிக்காமல் அன்றைய பொழுது கழிவதில்லை என்றாகிவிட்டது. முன்பெல்லாம் முகமூடி என்றால் கள்வன் என்பதாக இருந்தது.  இப்போது அந்த நிலை முற்றாக மாறி பாதுகாப்பு என்றாகிவிட்டது.

முகக்கவசம் இல்லாமல் பொது இடங்களில் தோன்றினால் விதி மீறல் ஆகிவிடுகிறது. அதையும் தாண்டி அபராதம் கட்டவேண்டிதாகிவிடுகிறது. ஒரு காலத்தில் மருத்த்வர்கள் மட்டுமே உபயோகித்த முகக்கவசம் அனைவரையும் மருத்துவர்களாக்கிவிட்டது. 

மறந்தும்கூட முகக்கவசம் இல்லாமல் வெளியே கிளம்ப முடியாது. இதில் இன்னும் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தைகள் கூட வெளியே கிளம்புமுன் முகக்கவசம் கேட்கப் பழகிக்கொண்டதுதான்.

இனி, வாழ்நாள் முழுதும் முகக்கவசத்துடனே நடமாட்டம் இருக்குமென்றே தோன்றுவதால் பாக்கெட்டில் கைகுட்டையோடு முகக்கவசம் ஒன்று எப்போதும் இருக்க வேண்டும் என்பதை இப்போதே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இதை காற்று வாக்கில் சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது.

வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டது திரும்பத்திரும்ப கூறித்தான் ஆகவேண்டும் . கொரொனா நம்மை விட்டுப்போய்விடும் என்ற அறிகுறி இப்போதைக்கு   அறவே இல்லை. ஒன்று, இரண்டு, மூன்று என்ற அலைகளில் இன்னும் வேகத்தோடு கிளம்பியிருப்பதாகவும் செய்திகள் கூறிகின்றன. அப்படியானால் நம் பாதுகாப்பு நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

வீட்டில் இருக்கும் நேரம் தவிர்த்து வெளியில் இருக்கும் ஒவ்வொரு விநாடியும் பாதுகாப்பு நமது பாக்கெட்டில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உணரப்படுதல் அவசியம் என்பது மட்டுமல்ல. கட்டாயம். இதை மீறினால் அபராதம் அச்சம் நம்முள் இருக்க வேண்டும்.

கைகுலுக்கி நட்பு பாராட்டும் நட்பு நெறியை மாற்றிவிட்டு. கைக்கூப்புவதைதான் இனி பழக்கமாக்கிகொள்ள வேண்டும். அதையே வழக்கமாக்கிக்கொள்ளவும் வேண்டும்.

தமிழன் மட்டுமே இப்பழக்கத்திற்கு முதன்மையானவனாகவும் இருக்கிறான், அவன் கற்றுக்கொடுத்த வணக்கம் நமக்கு பல அர்த்தங்களை வாரி வழங்கிக்கொண்டே இருப்பதை சற்று ஆராய்ந்தால் தெரியும்.

கைகூப்புவது நட்புக்காக மட்டுமல்ல. தயவு செய்து நெருங்காதே என்று கூறுவதற்கும் தகும். இதில் பாதுகாப்பு , சுகாதாரம் எல்லாம் இருக்கின்றன. 

இலையில் உண்பதால் துன்பம் இ(ல்)லை. இப்படிக்கூறிக்கொண்டே போகலாமே! அனைத்திலும் கற்பு இருக்கிறது.

வேலைக்குச்செல்லும் காலம் தொடங்கி விட்டது. அங்குதான் அதிக பாதுகாப்பு இருக்க வேண்டும். பாதுகாப்பை யாரோ வழங்குவார்கள் என்று காத்திருக்காமல் நாமே பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக இருக்குமாறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதும் கடமை என்றாகிவிட்டது.

தேவைக்காக வீட்டின் நுழைவாயிலில் ஸ்கேன் செய்வதற்கான ஏற்பாட்டையும் செய்யலாம். அதோடு நடமாடும் விற்பனைக்கும் தடைபோட்டுவிடலாம். 

ஏதெல்லாம் பொருத்தமில்லையோ அதைத்தவிர்க்கும் வழிகளை ஆராயலாம்.

ஒன்று மட்டும் சர்வ சத்தியம் . நம் பாதுகாப்புக்கு நாம் மட்டுமே பொறுப்பாண்மையாக இருக்க முடியும்! அதை உணர்ந்து கொண்டால் அனைத்தும் நலமாகும்.

-கா. இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here