வறுமை காரணமாக சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தலைமுடியை விற்று குழந்தைகளுக்கு உணவளித்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி பிரேமா தான் மொட்டை அடித்துக் கொண்டு பிள்ளைகளின் பசியாற்றி இருக்கிறார். செல்வம் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
அவர் பலரிடம் கடன் பெற்று அந்த தொகை 5 லட்ச ரூபாயா தாண்டியது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் ஏழு மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணத்திற்குப் பிறகு பிரேமா மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரும் செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்தார் .
கடன்காரர்கள் அவருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர் . இதனால் மன வேதனை அடைந்த பிரேமா தற்கொலைக்கு முயற்சி செய்தார் . ஆனால், உடன் பணியாற்றுவோர் அவரைக் காப்பாற்றி விட்டனர் .
கையில் சுத்தமாகப் பணம் இல்லாமல் இருந்த அவர் குழந்தைகளின் பசியைப் போக்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் . எனவே தனது தலைமுடியை 150 ரூபாய்க்கு விற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார் பிரேமா .
இதுகுறித்து தகவல் அறிந்த நபர் ஒருவர் பிரேமாவின் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் . இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் செய்த உதவியை அடுத்து பிரேமா கடனை அடைத்துள்ளார் . அதே போல் மாவட்ட நிர்வாகமும் பிரேமாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது .