கிள்ளான், பிப்.1-
கிள்ளான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு சற்று உயர்வு கண்டுள்ளதாக கிள்ளான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவரான சு.தமிழரசு தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் பதிவு 1124 என குறிப்பிட்ட அவர், கடந்தாண்டைக் காட்டிலும் 112 மாணவர்கள் அதிகமாக இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். கிள்ளான் மாவட்டத்திலுள்ள போர்ட்கிள்ளான் வாட்சன் தமிழ்ப்பள்ளி, மேரு சாலை தமிழ்ப்பள்ளி, ஜாலான் ஆக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி, எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, ஜாலான் தெப்பி சுங்கை தமிழ்ப்பள்ளி, நோர்த் ஹம்மோக் ( செத்தியா ஆலம் ) தோட்ட தமிழ்ப்பள்ளி, பிராப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, வலம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி, புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி, தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி ஆகிய 14 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டிற்கான மாணவர்கள் இணைந்துள்ளனர்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேளாலர் வாரியம், அரசுசாரா இயக்கங்கள், தமிழ்ப்பத்திரிகைகள், வானொலி நிலையங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை இடைவிடாது செய்து வரும் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு, தமிழ்ப்பள்ளிகளை காப்போம் போன்ற பிரச்சாரங்கள் சிறந்த பலனைக் கொடுத்துள்ளது என குறிப்பிட்ட வாட்சன் சாலை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான சு.தமிழரசு, கோவிட்-19 தொற்று பாதிப்பிலும் இயங்கலை வழி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களின் ஊக்குவிப்பில் தேசிய நிலையிலும் அனைத்துலக அரங்கிலும் புதிய கண்டுப்பிடிப்பு, இளம் ஆய்வாளர்கள் போன்ற பல சாதனைகளை படைத்து வருவதும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு உந்து சக்தியாக அமைகிறது என குறிப்பிட்டார்.
படங்கள் –பி.ஆர்.ஜெயசீலன்