இருண்ட ஆட்சியில் மீண்டும் வாழ முடியாது!’ – மியான்மர் மக்கள் போர்க்கொடி

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.
தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக மியான்மர் நாட்டு ராணுவம் குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனையடுத்து, அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்ததோடு ராணுவம் அதிரடியாக ஆட்சியையும் கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் நைபிடாவில் ஆங் சாங் சூகியின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைத்தனர்.

மியான்மர் நாட்டின் முந்தைய தலைநகரான யாங்கோனிலும் ஏராளமான பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆங் சாங் சூகியின் புகைப்படங்களை ஏந்தியபடி பேரணி சென்ற அவர்கள், தங்களது தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், மீண்டும் ஒருமுறை இருண்ட ஆட்சியில் வாழ முடியாது என்றும் தெரிவித்தனர்.

மியான்மர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக அறியப்படும் மாண்டலேவிலும் ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், ஆங் சாங் சூகியை விடுவிக்கக் கோரி மியான்மர் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here