செத்தியா அலாம் பகுதியில் செயல்படும் நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு முதலாம் ஆண்டில் 81 மாணவர்கள் இணைந்துள்ளனர் என பள்ளியின் தலைமையாசிரியர் அனுராதா முனியாண்டி தெரிவித்தார்.
தற்போது மாணவர்களில் பெரும்பாலானோர் இயங்கலை வழி பாடங்களைக் கற்று வருவதாகக் குறிப்பிட்டார். முதலாம் ஆண்டு மாணவர்களும் வாட்ஸ்அப் வழி கொடுக்கப்படும் பாடங்களையும் இயங்கலை வழி நேரடியாக நடத்தப்படும் வகுப்புகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர் என விளக்கமளித்தார்.
கடந்தாண்டு 90 மாணவர்கள் முதலாம் ஆண்டில் இணைந்ததாகவும் இவ்வாண்டு அது சற்று குறைந்துள்ளதாகவும் மக்கள் ஓசையிடம் தெரிவித்தார். இதற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது வகுப்பறை பற்றாக்குறையே. போதுமான வகுப்பறைகள் இல்லாத சூழ்நிலையில் அதிகமான மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் பல சிக்கல்களும் இடையூறுகளும் ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.
பிரதான கட்டடத்தில் 11 வகுப்பறைகள் செயல்படுகின்றன. தற்காலிகமாக கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தில் 2 வகுப்பறைகள் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டு வகுப்பறைகள் மட்டுமே செயல்படும் சாத்தியம் உள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.
கடந்தாண்டு ஆக மொத்தம் 414 மாணவர்கள் கல்வி பயின்றனர். ஆனால், இவ்வாண்டு அது 458 மாணவர்களாக உயர்ந்திருக்கும் நிலையில் 28 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பள்ளி வகுப்பறைகள் பற்றாக்குறையாகிவிட்ட சூழ்நிலையில் அதிகமான முதலாம் ஆண்டு மாணவர்களை இணைத்துக்கொள்ள முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக அனுராதா குறிப்பிட்டார்.
வகுப்பறை நிலைமை மாறினால் மட்டுமே அதிகமான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சாத்தியம் உண்டாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 தாக்கத்தால் கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் முறையாகச் செயல்பட முடியாத நிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு குறைந்திருந்தாலும் தற்போது தங்களின் பள்ளி மேற்கொண்டிருக்கும் இயங்கலை வழியிலான கல்வி ஒரு புதிய பாணியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு இயங்கலை வழி கல்வி போதிப்பது குறித்த விளக்கங்களைப் பெற்றோருக்கு முன்கூட்டியே வழங்கிவிட்ட நிலையில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் இந்த புதிய இயல்பு முறையிலான கல்வியை கற்கத் தயார் நிலையில் இருந்தனர்.
சுமார் 95 விழுக்காட்டு மாணவர்கள் இந்த நேரலை கல்வியிலும் வாட்ஸ்அப் முறையிலான கல்வியிலும் மிக ஆர்வத்துடன் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக அனுராதா முனியாண்டி தெரிவித்தார்.
பி.ஆர்.ஜெயசீலன்