கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பு பிரச்சினைகள்

அறிய வேண்டிய விடயங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்கள் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக செய்திகளை ஆக்கிரமித்திருந்த சூழ்நிலையில், தற்போது அந்த இடத்தை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த செய்திகள் பிடித்து வருகின்றன.

அதேபோன்று, கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து நிலவி வந்த அச்சம், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த அச்சமாக மாறியுள்ளது.

மருத்துவத் துறையை பொருத்தவரை, “பாதுகாப்பானது” மற்றும் “தீங்கற்றது”, “ஆபத்து”, “ஆபத்தை விளைவிக்கக் கூடியது” ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நிலையில், ஃபைசர் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இரண்டு பேருக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் இருந்தன. எனவே, கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பயன்படுத்த “பாதுகாப்பானவை” என்று பேசும்போது, அதற்கு உண்மையிலேயே என்னதான் அர்த்தம்?

“நீங்கள் முற்றிலும் பாதகமான விளைவைக் கொண்டிருக்காத ஒன்றை அதற்கு அர்த்தமாக கருதினீர்கள் என்றால், அது தவறு. எந்தவொரு தடுப்பு மருந்தும் ‘பாதுகாப்பானது’ அல்ல, எந்த மருந்தும் ‘பாதுகாப்பானது’ அல்ல. ஒவ்வொரு பயனுள்ள மருந்தும் தேவையற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது” என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினை சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் எவன்ஸ்.

“நன்மையுடன் ஒப்பிடும்போது தேவையற்ற விளைவுகளின் சமநிலை நன்மையின் பக்கம் அதிகமாக உள்ளதையே நான் ‘பாதுகாப்பானது’ என்று கருதுகிறேன்.”

உலகிலேயே முதல் முறையாக ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கிய பிரிட்டன் அரசு தங்களது மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தரநிலையை இந்த தடுப்பு மருந்து உறுதிசெய்துள்ளதாகத் தெரிவித்தது.

உடலில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று கண்டறியப்பட்ட சில மருந்துகள் அவற்றின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கீமோதெரபி மருந்துகளினால் சோர்வு, முடி உதிர்தல், ரத்த சோகை, மலட்டுத்தன்மை, நினைவாற்றல் மற்றும் தூக்கப் பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகின்றன. இருப்பினும், புற்றுநோயால் இறப்பதை எதிர்த்து நிற்கும் ஒருவரது உயிரை காப்பாற்ற இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதை யாரும் கேள்வி கேட்கவில்லை.

மற்ற சில மருந்துகளும் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவல்லவை. ஆனால், அது மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உதாரணமாக, வலி நிவாரணியான இப்யூபுரூஃபனை, பலரும் வீடுகளிலேயே வைத்திருக்கின்றனர். ஆனால், இந்த மாத்திரையை சற்றும் சிந்திக்காமல் எடுத்துக்கொள்வதால், உங்கள் வயிறு,  குடலில் ரத்தப்போக்கு,  துளைகள் உருவாவதுடன், சுவாசிப்பதில் சிரமம் , சிறுநீரகப்  பாதிப்பும் ஏற்படக்கூடும்.

அதாவது, சில மாத்திரைகள், தடுப்பு மருந்துகளால் பிரச்சனைகள் உருவாகலாம், ஆனால் அவற்றால் ஏற்படும் நன்மைகளுடன் ஒப்பிடுகையில் தீமையின் அளவு மிகவும் குறைவே.

“பாதுகாப்பு என்பது நேரடியான பொருளல்ல. இதற்கு பயன்பாட்டு அளவில் பாதுகாப்பானது என்றே அர்த்தம்” என்று கூறுகிறார் பிபிசியிடம் பேசிய பேராசிரியர் எவன்ஸ்.

தடுப்பு மருந்தை பொறுத்தவரை, முக்கிய வேறுபாடு என்னவென்றால் அது மிகவும் ஆரோக்கியமான மக்களுக்கு கொடுக்கப்படுகின்றன. அது அவர்களின் உடலின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுக்கூடும். ஆனால், அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் குறைந்தளவே இருக்க வேண்டும்.

ஒரு தடுப்பு மருந்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் மிக நீண்ட மதிப்பாய்வை மேற்கொள்கின்றன. இதுபோன்ற மதிப்பாய்வுகளில் எழுத்து வடிவ ஆவணங்களை விட தரவுகளே முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவே, ஒரு மருந்தில் ஏதாவது பாதுகாப்பு சார்ந்த கவலைகள் இருந்தால், அதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளிடமிருந்து எந்த விதத்திலும் மறைக்க முடியாது.

அதாவது, ஒரு மருந்துக்கு அனுமதிகோரி விண்ணப்பிக்கும் நிறுவனம், அதுசார்ந்த ஆய்வக தரவுகள், விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், மூன்று கட்டங்களை கொண்ட மருத்துவ பாதுகாப்பு பரிசோதனைகளின் தரவுகள் உள்ளிட்டவற்றை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் வழங்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள தரவுகள், ஆய்வு முடிவுகள் , விளக்க ஆவணங்கள் “சுமார் பத்தாயிரம் பக்கங்களை கொண்டிருக்கும்” என்று கூறுகிறார் பேராசிரியர் எவன்ஸ்.

ஃபைசர் தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து 95 சதவீதம் பாதுகாப்பு அளிக்கக்கூடும், எனினும் அதன் காரணமாக ஊசி போடும்போது வலி, தலைவலி, உடல்வலி ,  உடல் குளிர்ச்சியடைதல் உள்ளிட்ட பொதுவான பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த தடுப்பு மருந்தை போட்டுக்கொள்பவர்களில் பத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறிக்கும் இந்த பக்கவிளைவுகளை பாராசிட்டமால் மாத்திரைகளை கொண்டு நிர்வகிக்கலாம்.

“பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மிகவும் அனுபவம் வாய்ந்தது. தடுப்பு மருந்தின் பலன் அதன் பக்கவிளைவுகளை விட அதிகமாக இருப்பதாக அவர்கள் கூறினால் அதை உறுதியாக நம்பலாம்” என்று கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவத் துறையை சேர்ந்த பேராசிரியர் பென்னி வார்டு.

உமிழ்நீர் சாம்பிள்கள் மூலம் கோவிட்-19 பரிசோதனை நடத்துவதற்கு இந்தியா இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஏற்படுத்தும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து இன்னும் தெளிவாக தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஃபைசர் தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 20,000 பேர், மாடர்னா தடுப்பு மருந்து சோதனையில் பங்கெடுத்த 15,000 பேர், ஆக்ஸ்போர்டு/ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தின் சோதனையில் பங்குபெற்ற 10,000 பேர் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தடுப்பு மருந்து பலனளிக்கிறது என்பதை அறிவதற்கும், அதனால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளை கண்டறிவதற்கும் இந்த தரவு போதுமானது.

“பக்கவிளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும் பட்சத்தில், அதை லட்சக்கணக்கானோரிடம் பரிசோதிக்காமல் தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு அவற்றை கண்டறிவது எப்போதும் சாத்தியமான ஒன்றல்ல” என்று பேராசிரியர் வார்டு கூறுகிறார்.

இது கொரோனா வைரஸுக்காக கண்டறியப்படும் தடுப்பு மருந்தோடு தொடர்புடைய பிரச்னை மட்டுமல்ல. பருவகால காய்ச்சலை தடுப்பதற்காக போடப்படும் ஊசியினால் கூட, பத்து லட்சத்தில் ஒருவருக்கு நரம்பு குறைபாடு ஏற்படுகிறது.

போலிச் செய்திகளுக்கு இரையாகாதீர்கள் !

தற்செயலாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை மக்கள் தடுப்பு மருந்தால் ஏற்படுவதாக நினைத்துக்கொள்வது அச்சுறுத்தலை விளைவிக்கிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு பல நாடுகளில் வரத் தொடங்கியுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அதுகுறித்த கட்டுக்கதைகளும், போலிச் செய்திகளும் இணையத்தில் பரவத் தொடங்கும் என்பதை எளிதாக கணிக்க முடியும்.

ஆனால், உண்மை என்னவென்றால் உடல்நலப் பிரச்சனை என்பது எல்லா நேரங்களிலும் நடைபெறும் ஒன்றாகத்தான் இருக்கிறது. உதாரணமாக, பிரிட்டனில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒருவர் மாரடைப்பாலும், ஒருவர் பக்கவாதத்தாலும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஆண்டுக்கு ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

ஒருவர் தடுப்பு மருந்தை போட்டுக்கொண்ட பிறகு, ஒரு நாளிலோ அல்லது சிறிது காலத்திற்கு பிறகோ கடுமையான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், அந்த பிரச்னை தடுப்பு மருந்து போட்டாலும், போடப்படாமல் இருந்தாலோ கூட ஏற்பட்டிருக்கக் கூடும்.

தட்டமைக்கு தடுப்பு மருந்து வந்தபோது, அதை தவறுதலாக ஆட்டிசத்துடன் தொடர்புபடுத்தியதன் விளைவாக அந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்த தகவல்களை ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகிறது.

மேலும், ஒரு தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அதனால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சனைகளை நீண்டகால அடிப்படையில் உலக நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here