முடங்களின் முடங்கல்!
முகத்தைத் திருப்பி முதுகில் வைத்தால்,
முண்டம் என்பார்கள் !- அந்த,
முகத்தில் கண்கள் இல்லை என்றால்.
முடமெனச் சொல்வார்கள்!
எதுகை மோனை இணையா விட்டால்,
எவர்தான் மதிப்பார்கள்?- சொலல்,
புதுமை ஆயினும் புரியா விட்டால்
பொய்மை என்பார்கள்!
பொய்மை என்பதும் கவிதைக் கழகு,
புரிந்தே உணர்ந்தாலே!- இதில்,
பொய்-மெய் என்பதன் அர்த்தம் வேறு,
புரியா திருந்தாலே!
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
அழகிய இலக்கணங்கள்- குறளடி,
விழுமிய வரிகளுள் விழுந்தவை யாவும்
வியத்தகு மரபினங்கள்!
மரபே இன்றி மந்திரத் தாலே
மாங்காய் விழுவதில்லை!- அந்த
மரபே இன்றி மண்ணில் கூட
மந்திரம் வென்றதில்லை!
தந்திரம் காட்டித் தர்மம் என்றால்,
தரித்திரம் என்பார்கள்!- புது
எந்திரம் ஆயினும் இயங்கிட வேண்டும்
எப்படி வென்றார்கள்?
பொம்மைகள் செய்தே பொதுவினில் வைத்தால்,
பொய்வாய் மழலைக்கும்- அதன்,
உண்மைகள் தெரிய பக்குவம் போதா
உணர்வால் பல்லிளிக்கும்!
இளிப்பைக் காட்டி இலக்கணம் செய்யும்
இயலா வித்தகரீர்!- புது,
இளிப்பில் கூட இலக்கணம் இன்றேல்
இலட்சியம் தவறாகும்!
வீர. கா. அருண்மொழித்தேவன்