–வருத்தம் தெரிவித்தார் ஸ்டெயின்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் லத்துக்கு முன்னதாகவே விலகினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயது வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஏலத்துக்கு முன்னதாகவே விலகினார்.
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடி வரும் ஸ்டெயின் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டியை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அணியிலும் அதிக எண்ணிக்கையிலான வீரர்களும், அதிக அளவில் பிரபலமான வீரர்களும் இடம் பெற்று வருகிறார்கள். இந்த போட்டியின் மூலம் வீரர்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதனால் சில சமயங்களில் கிரிக்கெட் ஆட்டத்தின் தனித்தன்மை மறக்கப்படுகிறது. ஆனால் மற்ற லீக் போட்டிகளில் ஆட்டத்தின் தன்மை குறித்து அதிகம் பேசப்படுகிறது’ என்று தெரிவித்து இருந்தார். ஸ்டெயினின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஐ.பி.எல். பற்றிய தனது கருத்துக்கு ஸ்டெயின் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். எனக்கு மட்டுமின்றி மற்ற வீரர்களுக்கும் சிறப்பானதாகவே அமைந்து இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியை மற்ற லீக் ஆட்டங்களுடன் ஒப்பிட்டு தரம் தாழ்த்தவோ? அல்லது அவமதிக்கவோ? நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
சமூக வலைதளங்கள் பெரும்பாலும் தவறான அர்த்தங்களை வெளியிடக்கூடும். என்னுடைய கருத்து யாரையாவது வேதனைப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டெயின் ஐ.பி.எல். போட்டியில் 95 ஆட்டங்களில் ஆடி 97 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.