பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் பதிவோம்

 

எங்கள் குடும்பத்தில் நானும் என் மனைவியும் பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளிகளில் பயின்றதால் எல்லா வகை ஏற்றங்களையும் பெற்று வருகிறோமேயன்றி எத்தகைய ஏமாற்றத்தையும் பெறவில்லை என்று இடைநிலைப்பள்ளி ஆசிரியர் பாண்டியன், அவரின் துணைவியாரும் பினாங்கு செபெராங் பிறை பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி துணைத் தலைமையாசிரியருமான திருமதி மா.பத்மா இருவரும் தெரிவித்தனர்.

எங்கள் இருவர் குடும்பங்களிலும் எங்கள் உடன்பிறந்தோர் அனைவரும் தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில்தான் படித்தோம். அதனால் எங்கள் கல்வியில் எந்தச் சுணக்கமும் ஏற்பட்டதில்லை. வறுமையான அக்காலகட்டத்தில் நம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்ற பலரும் இன்று நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். நாங்கள் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் வாழவும் தமிழ்ப்பள்ளிதான் மூலக்காரணம். இன்று எங்கள் பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்பி அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.

எங்கள் மூன்று பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளி உருவாக்கம்தான். அவர்கள் மூவருமே நாங்கள் பெருமை கொள்ளும் வகையில் கல்வி சாதனைகளைச் செய்துவருகின்றனர். உயர்கல்வியிலும் சிறந்த மாணவர்களாக அவர்கள் இருக்கின்றனர். நாங்கள் தமிழ்ப்பள்ளியில் பயின்றதற்காகவோ எங்கள் பிள்ளைகள் பயில்வதற்காகவோ என்றுமே வருத்தப்பட்டதில்லை. மாறாக அது மகிழ்ச்சியையே ஈட்டித்தந்துள்ளது. இது உண்மையில் தமிழ்ப்பள்ளிக்குக் கிடைத்த வெற்றிதான்.

அக்கறையும் தன்முனைப்பும் கொண்ட குழந்தைகள் எந்த மொழிப்பள்ளியில் பயின்றாலும் சிறந்து விளங்குவர் என்பதே உண்மை. ஆகவே அதை தாய்மொழிக் கல்வியில் இருந்து அடைந்து காட்டுவது நம் மொழிக்கும் இனத்துக்கும் பெருமை சேர்க்கும் பெருமிதங்களாகும். தமிழ்ப்பள்ளிகள் என்பவை மலேசிய அரசு நமக்குக் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த வாய்ப்பாகும். அத்தகைய அரியதொரு வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்திக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இன்றைய கல்விச் சவால்களை எதிர்கொள்வதில் தமிழ்ப்பள்ளிகள் கொஞ்சமும் குறைந்தவை அல்ல. தமிழ்ப்பள்ளியைத் தேர்வு செய்வதன் வழி இந்நாட்டில் நம் மொழி இன அடையாளங்கள் நிலைபெற நம்மால் பெரும் பங்காற்ற முடியும்.
மேலும் எழும் தலைமுறைகள்தோறும் நாம் தமிழர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த முடியும் அத்தகைய மொழி இன பண்பாட்டு சமய உணர்வைத் தமிழ்ப்பள்ளிகள் நமக்கு ஊட்டும். அதன் அடையாளமாகவே எங்கள் பிள்ளைகளுக்கும் பொருள் பொதிந்த நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்ட முடிந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

மூன்று பிள்ளைகளில் மூத்தவர், யாழினி பாண்டியன் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். அடுத்தவர் கனிமொழி பாண்டியன் ஐந்தாம் படிவ மாணவி, கடைசி மகன் காவியன் பாண்டியன் ஒன்றாம் படிவம் படிக்கிறார்.

கவின்மலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here