அழகிய தமிழே எனதுயிரே!

 

ஒவ்வொரு தமிழரும் தங்கள் குழந்தைகள் தமிழ்ப்பள்ளியில் பயில்வதை உறுதிசெய்ய வேண்டும். தமிழர்களாகிய நாம்தான் இன்னும் தமிழ்ப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேருங்கள் என்று நம்மினத்தவரிடையே பிரச்சாரம் செய்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

வேற்று இனத்தினர் இவ்வாறு பிரச்சாரம் செய்வதைப் பார்த்ததுண்டா? ஏன் நமக்கு மட்டும் இந்த அவல நிலை? இந்நிலையை நம்மவர்கள்தாம் உருவாக்குகின்றனர். தமிழர்கள் ஒவ்வொருவரும் மாறினால் இந்த அவல நிலையும் மாறும். இதனை அனைவரும் தாமாக உணர்ந்து செய்தோமானால் இனி எந்தப் பிரச்சாரமும் தேவைப்படாது என்று சொல்கிறார் கெடா புக்கிட் ஜெனுன் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் பாலு மாணிக்கம்.

தமிழ்ப்பள்ளிகள் நமது மொழி மட்டுமல்லாது கலாச்சாரத்தையும் மாண்பையும் வளர்க்கின்றன. தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நல்லொழுக்கத்தையும் பணிவையும் நல்ல நெறிகளையும் பாடத்தோடு ஒன்றிணைந்து கற்கின்றனர் என்றால் எவராலும் மறுக்க இயலாது. பிற இன மாணவர்களைக் காட்டிலும் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிலும் முதன்மை நிலையில் சாதனைபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, விளையாட்டுத்துறை, புத்தாக்கம் என அனைத்திலும் பீடுநடை போட்டு வருகின்றனர். ஒவ்வொரு தமிழரும் தமிழ்மொழியைச் சரளமாகப் பிழையின்றி பேசுவதையும் படிப்பதையும் எழுதுவதையும் நமது வாழ்வியல் கடமையாகக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தமிழ்க்கல்வி கற்ற எவரும் வாழ்க்கையில் வீழ்ந்ததாகச் சரித்திரமில்லை.  தமிழ்ப்பள்ளியில் பயின்ற என் துணைவியார் திருமதி பஞ்சவர்ணம் கிருஷ்ணன் மட்டுமல்லாது எங்கள் நான்கு பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

நான் இன்றுவரை 30 ஆண்டு காலமாகத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழியை எனது முதன்மைப் பாடமாகப் போதித்து வருகிறேன். இது எனக்கு ஆத்மார்த்தமான மனதிருப்தியை அளிக்கின்றது. அந்த வகையில் என் இரண்டாம் மகளும் பேராக் மாநிலத்தில் உள்ள குரோ தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் நான்கு பிள்ளைகளும் எஸ்.பி.எம். தேர்வு வரை தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் தேர்வுப் பாடமாக எடுத்துள்ளனர். இன்று அவர்கள் உலகளாவிய நிலையில் பல சாதனைகள் படைத்து வருகின்றனர் என்றால் அவர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுமே என பெருமையோடு எங்கும் கூறுவேன்.

நாம் தலைநிமிர்ந்து வாழ நமது உரிமையான தமிழ்க்கல்வியை நிலைநாட்ட வேண்டும்; அதற்கு தமிழ்ப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும்  வாழ்த்துகள். தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும்.
 தமிழ்ப்பள்ளி நமது உரிமை!!

-கவின்மலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here