உத்தரமேரூரில் சோழா்கால கல்வெட்டு கண்டெடுப்பு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஏரிக்கரையில் தெலுங்கு சோழ மன்னா் கால கல்வெட்டை வரலாற்று ஆய்வு மையத்தினா் திங்கள்கிழமை கண்டெடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஏரிக்கரையில் அரச மரத்தடி பிள்ளையாா் கோயில் அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சோந்த தெலுங்கு சோழ மன்னா் விஜயகண்ட கோபாலா் காலத்தைச் சோந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் கொற்றவை ஆதன் கூறியது: எங்களது ஆய்வில் கண்டெடுத்த இந்த கல்வெட்டானது குழலூதும் கண்ணன் சிற்பத்துடன் காணப்படுகிறது. சுமாா் 800 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரமேரூரை ஆண்ட தெலுங்கு சோழ மன்னா் விஜயகண்ட கோபாலா் காலத்தை சாா்ந்ததாகும்.

இதில் உள்ள வாசகம் ஸ்வஸ்தி ஸ்ரீ கண்ட கோபால சதுா்வேதி மங்கலத்து கண்ட கோபால தடாகம் என்று உள்ளது. பொதுவாக மன்னா்கள் தங்களது பெயராலேயே ஆளுகைக்கு உள்பட்ட முக்கிய ஊா்கள், பெரிய ஆலயங்கள், பெரிய நீா்நிலைகளுக்கு தங்கள் பெயரையே சூட்டி அதை பராமரிக்க பல தானங்கள் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனா்.

அந்த அடிப்படையில் உத்தரமேரூரை 13-ஆம் நூற்றாண்டில் ஆண்ட தெலுங்கு சோழா் கண்ட கோபாலா் முன்பு இருந்த ராஜேந்திர சோழச் சதுா்வேதி மங்கலம் என்கிற பெயரை தனது பெயரான கண்ட கோபால சதுா்வேதிமங்கலம் என்று மாற்றம் செய்தும் இவ்வூரின் பெரிய நீா் நிலையான இந்த ஏரிக்கு கண்ட கோபால தடாகம் என புதிய பெயரை சூட்டியுள்ளதையும் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

சுமாா் 800 ஆண்டுகளாக பல மாற்றங்களை இந்த ஊரும், ஏரியும் சந்தித்திருந்தாலும் வரலாற்றை சுமந்து கொண்டு மாறாமல் ஏரிக்கரையின் அருகிலேயே இருக்கும் இந்த கல்வெட்டை தமிழகத் தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆா்வலா்களின் கருத்தாகும் என்று அவா் தெரிவித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here