எல்லாத் தொகுதிகளையும் அம்னோவே எடுத்துக்கொள்ளட்டும்- சிவராஜ் சீற்றம்

சைபைர்ஜெயா-

தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து தொகுதிகளையும் வரும் நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அம்னோ சுங்கை சிப்புட் தொகுதி புத்ரி தலைவி நோரஸுரா அப்துல் கரிம் விடுத்திருக்கும் அறிக்கை சினமூட்டுகிறது என்று மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சி. சிவராஜ் நேற்று தெரிவித்தார்.

அப்படியானால் பங்காளி கட்சிகளின் எல்லாத் தொகுதிகளையும் எடுத்துக்கொண்டு தேசிய முன்னணி சின்னத்தில் அல்லாமல் அம்னோ டிக்கெட்டிலேயே போட்டி போடுங்கள் என்று கேமரன்மலை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான அவர் சுட்டினார்.

இதுபோன்ற அரைவேக்காட்டு சிந்தனைகளும் பேச்சும்தான் விசுவாசமிக்க பங்காளி கட்சிகளுடனான அம்னோவின் உறவு நொறுங்கிப் போகிறது.

கடந்த பொதுத்தேர்தலில் தோல்விகண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர் பங்காளி கட்சிகள் பல அம்னோவின் உறவைத் துண்டித்துக்கொண்டன. ஆனால், மஇகா இன்றளவும் விசுவாசத்துடன் அம்னோவுடனான பயணத்தைத் தொடர்கிறது என்று சிவராஜ் திட்டவட்டமாகக் கூறினார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ போட்டியிடுவதற்குரிய காலம் கனிந்துவிட்டது. மஇகா அதற்கு வழிவிட வேண்டும் என்று

 

 முன்னதாக நோரஸுரா அறிக்கை விட்டிருந்தார்.

மஇகாவின் கோட்டையாக விளங்கிய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியைக் கடந்த மூன்று பொதுத்தேர்தல்களிலும் தற்காக்கத் தவறிவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் முதலாவது பொதுத்தேர்தல் முதல் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மஇகாவின் கோட்டையாகவே திகழ்ந்து வந்தது.

மஇகா முன்னாள் தேசியத் தலைவர் துன் டாக்டர் வீ.தி. சம்பந்தன் வெற்றிப் பயணத்தைத் தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து அவருக்குப் பின்னர் மஇகா தேசியத் தலைவர் பதவியை ஏற்ற துன் டாக்டர் ச. சாமிவேலு அந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஆனால், 2008 பொதுத்தே

ர்தலில் அவர் அதிர்ச்சி தோல்விகண்டதில் இருந்து கடந்த 3 பொதுத்தேர்தல்களிலும் அத்தொகுதியை மீட்க முடியாமல் போனது.

இந்நிலையில் தேசிய முன்னணி அத்தொகுதியை அம்னோவிடம் ஒப்படைக்கும் காலம் கனிந்துவிட்டது என்று அம்னோ சுங்கை சிப்புட் தொகுதி புத்ரி பிரிவு குறிப்பிட்டிருக்கிறது.

அதற்கு கோட்டா முறையை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த கோட்டா விளையாட்டு வேண்டாம் என்று டத்தோ சிவராஜ் நோரஸுராவுக்கு நினைவுறுத்தினார்.

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here