சுல்தான் படம் எப்படி உள்ளது?

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், அபிராமி, யோகிபாபு, சதீஷ், கே.ஜி.எஃப் ராம், பொன் வண்ணன், எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, மாரிமுத்து, சென்ராயன்; ஒளிப்பதிவு: சத்தியன், சூரியன்; இசை: விவேக் மெர்வின்; பின்னணி இசை: யுவன் ஷங்கர் ராஜா; எழுத்து, இயக்கம்: பாக்கியராஜ் கண்ணன்.

‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த படம் இது. வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டு ‘கைதி’, ‘தம்பி’ ஆகிய படங்களில் நடித்த கார்த்தி இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு மசாலா கதையை கையில் எடுத்திருக்கிறார்.

ஓர் ஊரில் சேதுபதி (நெப்போலியன்) என்று ஒரு மிகப் பெரிய தாதா. ஏகப்பட்ட ரவுடிகளை வைத்து தீனி போட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி அன்னலட்சுமி (அபிராமி). குழந்தை பிறந்தவுடனேயே அன்னலட்சுமி இறந்துவிடுகிறார். அந்தக் குழந்தையை சேதுபதியின் ரவுடிகள்தான் வளர்த்து பெரிய ரோபோட்டிக்ஸ் பொறியாளராக்கிவிடுகிறார்கள்.

அந்தக் குழந்தைதான் சுல்தான் (கார்த்தி). இந்த நிலையில், சேதுபதி கொல்லப்பட்டுவிடுகிறார். ஊருக்குத் திரும்பும் சுல்தான், இந்த ரவுடிகளை காவல்துறையின் பிடியிலிருந்து காப்பாற்றி புதிய வாழ்வை அளிக்க நினைக்கிறார்.

இதற்கு நடுவில், பக்கத்து ஊரில் ஒரு பெரிய பிரச்சினை. அந்த ஊரை காப்பாற்றுவதாக வாக்களித்திருந்தார் சேதுபதி. அதற்கு ரவுடிப் பட்டாளத்தின் உதவி தேவைப்படுகிறது. பக்கத்து ஊரைக் காப்பாற்றுகிறாரா அல்லது ரவுடிகளைக் காப்பாற்றுகிறாரா என்பது மீதிக் கதை (இதற்கு நடுவில் நம்மையும் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்).

தமிழில் வந்த பல படங்கள், தெலுங்கில் வெளியான சில படங்களின் சாயலோடு வந்திருக்கிறது இந்தப் படம். கதை ஏதோ சேலத்திற்கு அருகில் நடப்பதைப் போலக் காட்டினாலும், உண்மையில் எங்கே இதுபோல ஓர் ஊர் இருக்கிறது என்பதே புரியவில்லை.

ஒரு கிராமம், அந்தக் கிராமத்தைக் குறிவைக்கும் கார்ப்பரேட் நிறுவனம். அதனிடமிருந்து கிராமத்தைக் காப்பாற்றும் ஹீரோ – இந்தக் கதையை எத்தனை கொடுமையான படங்களில் பார்த்துவிட்டோம்? மறுபடியும் அதே கதை இந்தப் படத்திலும் தலைகாட்டுகிறது.

படத்தின் முதல் பாதியிலேயே, வில்லன்களை தனி ஆளாக அடித்துத் துரத்தி, கேஜிஎஃப் ராமின் கண்களை பார்வையிழக்கச் செய்து கிராமத்தை காப்பாற்றிவிடுகிறார் ஹீரோ.

“அட, பரவாயில்லையே, இடைவேளையோடு படமே முடிந்துவிட்டதே” என்று நினைத்தால், மறுபடியும் அதே கதையை முதலில் இருந்த ஆரம்பித்து, வேறொரு கோட் – சூட் போட்ட வில்லனைக் கூட்டிவருகிறார்கள். பிறகு அவரையும் ஹீரோ அடித்துத் துவைக்கும்வரை காத்திருந்தால், படம் ஒரு வழியாக முடிகிறது.

இதற்கு நடுவில் ஹீரோயினை வைத்து, “எத்தனை ஜி வந்தாலும் கஞ்சி விவசாயிதான் ஊத்தனும் ராஜா” என வசனம் பேச வைத்திருக்கிறார்கள். இந்த வசனத்தைக் கேட்டு ரவுடிகளும் கொஞ்ச நேரம் விவசாயம் பார்க்கிறார்கள். இந்தக் கொடுமையைப் பார்க்கும்போது கஞ்சியே இல்லாமல் இருந்துவிடலாமே என்று தோன்றுகிறது.

படம் துவங்கி வெகுநேரத்திற்கு கதை எதை நோக்கிச் செல்கிறது என்ற குழப்பம் நீடிக்கிறது. கதாநாயகனின் காதலா, பக்கத்து ஊரை கதாநாயகன் காப்பாற்றுவதா, ரவுடிகளைத் திருத்துவதா, கார்ப்பரேட் வில்லனை துரத்துவதா என்ற குழப்பத்திலேயே படம் நெடுக வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தில் கார்த்தி என்ன செய்துவிட முடியும்? கைக்குக் கிடைத்ததைவைத்து கண்ணில் படுபவர்களையெல்லாம் அடிக்கிறார். நாயகி ராஷ்மிகா மந்தனா எல்லாக் கட்சிகளிலும் பல்லைக் கடித்தபடி பேசிவிட்டுச் செல்கிறார். யோகி பாபு படம் நெடுக வந்தாலும் 2-3 காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். சதீஷ், எம்.எஸ். பாஸ்கர் போன்றவர்கள் மின்னலைப் போலத் தோன்றி மறைகிறார்கள்.

தமிழ் சினிமாவிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு புதிதாக வரவிருக்கும் அரசுதான் ஆவணசெய்ய வேண்டும். வேறு வழியே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here