மக்கள் ஓசையின் கல்விப் பணி ஆக்கப்பூர்வமானது

மனம் நெகிழ்ந்தார் நடராஜா

 

மலாக்கா-

ஊடகம் என்பது ஒரு வணிக நிறுவனம் மட்டும் அல்ல. அது ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றாக விளங்குகிறது. அவ்வகையில் மலேசிய இந்தியர்களின் இதயக் குரலாக தொடர்ந்து ஒலிக்கும் மக்கள் ஓசை தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு சிறந்த்தொரு திட்டத்தை வகுத்துள்ளது பாராட்டுகுரியது என தமிழ் ஆர்வலரும் , இளம் தொழில் அதிபருமான செ.நடராஜா கூறினார்.

தமிழ் மொழி காக்கப்பட, தமிழ் மொழி வாசிப்பு பழக்கத்தை தமிழ் நாளிதழ் வழி தமிழ்ப் பள்ளி மாணவர்களிடத்தில் மேலோங்கச் செய்து தாய் மொழிக்கு இனிமை சேர்க்கும் வகையில் இல்லந்தோறும் மக்கள் ஓசை கல்விப் பயணம் திகழ்கிறது.

அவ்வகையில் தான் கல்விக் கற்ற மலாக்கா, புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இத்திட்டத்தைப் படரச் செய்ய வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தில் தனது பங்களிப்பாக திங்கள் தொடங்கி வெள்ளிக்கிழமை வரை தினமும் ஐந்து மக்கள் ஓசை நாளிதழ்கள் என 9 மாதங்களுக்கான செலவை பள்ளி மேலாளர் வாரிய துணைத் தலைவரான நடராஜா ஏற்றுக் கொண்டார்.

உலகையே கையில் கொண்டு வரும் வல்லமை கொண்ட நாளிதழ்களை படிக்கும் பழக்கம் அனைவருக்கும் கிடைக்காது. ஆனால், நாளிதழ் படிப்பதினால் பெறுகின்ற பயன் அதீதமானவை.

அனைத்து துறையினருக்கும் தேவையான செய்திகள், நாளிதழ்களில் உள்ளன. அதை பகுத்தாய்ந்து படிக்க வேண்டும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் கிடைத்தாலும் அவற்றில் கருத்தாழம் இருக்காது. சமயங்களில் உண்மையும் இருக்காது. உலகத்தை தெரிந்து கொள்ள நாளிதழ்களே சிறந்தவை. இளைய தலைமுறையினர் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை இத்திட்டத்தின் வழி கடைபிடிக்க வேண்டும்.

மக்கள் ஓசை வழி நடத்தும் இத்திட்டம் இக்காலத்திற்கு மிகப் பொருத்தமான ஒன்று.. இந்த சரியான தருணத்தை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .ஆசிரியர்களும் ,பெற்றோரும் பிள்ளைகளுடன் இணைந்து செயல்படலாம் என புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் துணைத் தலைவரும், மலாக்கா மாநில ம.இ.கா. செயலாளருமான நடராஜா குறிப்பிட்டார்.

பள்ளியின் தலைமையாசிரியர் சு.கிருஷ்ணன் பள்ளிக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடு தழுவிய நிலையில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் உலா வரும் இல்லந்தோறும் மக்கள் ஓசை தித்திக்கும் தாய்த் தமிழுக்கு கிடைத்த பெருமை என்றார்.

ரெ. மாலினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here