பெண்கள் புதிய எழுச்சி பெற வேண்டும்

பெண்களின் ஆளுமை பேசப்படவேண்டும்!

நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அது முதல் பல்வேறு பகுதிகளில் நாடு இமாலய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது – கண்டும் வருகிறது. இந்த சாதனைகளில் ஆண் – பெண் சமத்துவம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே மாறி விட்டது.

தங்களின் சொந்த நலன்கள் குறித்து குரல் கொடுப்பதற்குக்கூட அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை. இதனால் நாட்டு வளர்ச்சி தொடர்பான முடிவுகள் எடுக்கும் நடைமுறைகளில் பங்கேற்பதற்கு அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் கிட்டுவது இல்லை.

 வாய்ப்புகல்க் வேண்டும் என வலியுறுத்தியும் அரசியலில் பெணகளுக்கு சமமான குரல் வேண்டும் எனக் கோரியும் போராடி வரும் எம்பவர் எனும் அரசு சாரா அமைப்பு .

அரசியலில் பெண்களின் பங்கேற்பு ஆரோக்கியமாக இல்லை. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் அவர்களால் தனித்துவமாக பிரகாசிக்க இயலவில்லை என்பதை எம்பவர் சுட்டிக்காட்டி இருக்கிறது.

தொடக்கமாக கொள்கை வகுப்பில் பெண்களின் செல்வாக்குக்கு இடமளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஓர் எழுச்சிமிக்கத் தாக்கத்தை அவர்கள் பெறுவர் என்ற சிந்தனையை ஆதிக்கத்தில் இருக்கும் ஆண்கள் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகவும் அவசியமாகவும் இருக்கிறது.

பெண்களின் குரல்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இனி வலுப்பெறலாம். இளம் தலைமுறையினரின் அரசியல் ஈடுபாடு இதனைக் கோடிகாட்டுவதாக உள்ளது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் பெண்களின் வாழ்க்கை , நலன்களை பலவீனமானதாகவே பார்த்து வருகின்றனர். இனிமேலும் இந்த மனப்போக்கு தொடர வேண்டுமா என்பதை அதிகாரத்தில் உள்ள ஆண்கள்தான் முடிவு   செய்ய வேண்டும்.

பெண்கள் இன்னமும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளனர். விருப்பம்போல் செயல்படுவதற்கு இன்னமும் தடைகளும் முட்டுக்கட்டைகளும் போடப்பட்டுத்தான் வருகின்றன.

எதைச் செய்ய வேண்டும் – எதைச் செய்யக்கூடாது என்று அவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்படுகிறது.

அவர்களின் தேர்வுகள் அனைத்தும் அவர்களின் சுய முடிவுகளாக இருப்பதில்லை. சமூகம் சார்ந்ததாகவே இருக்கின்றன. எப்படி உடை உடுத்த வேண்டும். எப்படிப் பேச வேண்டும் என்பதை மற்றவர்கள்தான் முடிவு செய்கின்றனர்.

ஆனால், சமுதாயத்தில் ஒரு பெண் ஒரு சமமான உறுப்பினர் என்பதை பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகள் துடைத்தொழிக்கப்பட வேண்டும் எனக் கோரும் அனைத்துலக சாசனம் உறுதி ஙெ்ய்கிறது.

மலேசியாவில் கலாச்சாரம், பண்பாடு, சம்பிரதாயங்கள் பெண்களுக்கு ஒரு வட்டத்தைப் போட்டு வைத்துள்ளது. ஒரு பெண் நல்லவள் அல்லது கெட்டவன் – இப்படித்தான் அவள் பார்க்கப்படுகிறாள்.

பெண்கள் பற்றிய வியாக்கியானங்களை அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் நிர்ணயிக்கின்றனர். ஆண் – பெண் இடையிலான சமத்துவ ஏற்றத் தாழ்வுகளும் இவர்களால்தான் வரையறுக்கப்படுகின்றன.
அரசியலில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும்  எதிர்பார்ப்பு எனும் சுமை அவர்களின் தோள்களில் ஏற்றப்படுகிறது. எதிர்பார்ப்புகள் எதிர்பார்த்தபடி இல்லையென்றால் ஒரு பெண்ணின் அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமாகி விடுகிறது.

கலாச்சார புரட்சி ஒன்றால் மட்டுமே பெண்களின் அறிவாற்றல், நிர்வாகத் திறன், ஆளுமை ஆகியவை வெளியில் துணிந்து கொண்டு வரப்பட வேண்டும்.

மொத்தத்தில் பெண்கள் பலவீனமானவர்கள், உணர்ச்சிவயப்படக்கூடியவர்கள் என்ற நினைப்பு இனியும் தலையெடுக்க அனுமதிக்கக்கூடாது.

பெண்கள் புதிய அவதாரம் பூண வேண்டும். அதன் எழுச்சி வெற்றியின் உச்சமாக  மாற வேண்டும்.

 

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here