பொதுநல விளம்பரப் பலகையில் சாயம் வீசி சேதம்

சேவியர் ஜெயகுமார் போலீசில் புகார்

பந்திங்-

கோலலங்காட் வட்டாரத்தில் பொருத்தப்பட்டிருந்த டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமாரின் பொதுநல விளம்பரப் பலகையில் பொறுப்பற்ற சில நபர்களால் சாயம் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நேற்று பந்திங் காவல் நிலையத்தில் புகார் அளித்த கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பந்திங் சுங்கை புவாயா பகுதியில் ஓர் இடத்திலும் ஸ்ரீ சீடிங் அருகில் உள்ள ஒரு பகுதியிலும் இரண்டு பொதுநல விளம்பரப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்று விழிப்புணர்வு வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால் கேரித்தீவு அருகில் பொருத்தப்பட்டிருந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துப் பதாகையில் சேவியரின் படம் கிழிக்கப்பட்டுள்ளது.

எந்தவித அரசியல் நோக்கமின்றி பொதுமக்களின் நலன் கருதி பொருத்தப்பட்டிருந்த இந்த விளம்பரப் பலகைகளை சாயம் வீசி சேதப்படுத்தியுள்ளதும் நோன்புப் பெருநாள் வாழ்த்துப் பதாகையில் தன்னுடைய படம் கிழிக்கப்பட்டுள்ளதும் கண்டிக்கத்தக்கது என்றும் அரசியலில் நேரடியாக மோத முடியாதவர்கள் இவ்வாறான கீழ்த் தரமான நடவடிகைகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர் சாடினார்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தால் பொதுத்தேர்தல் வழி அதனை எதிர்கொள்ள வேண்டும். மாறாக இவ்வாறான நடவடிக்கைகளினால் யாருக்கும் எந்தவிதப் பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் இதனால் தாம் துவண்டு விடப் போவதில்லை என்றும் கூறிய அவர் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சேவைகள் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

தாம் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தொடர்ந்து தமது சேவை மையத்தின் வழி மக்களுக்குச் சேவைகள் செய்து வருவதாகவும் உதவிகள் தேடி வருபவர்களுக்கு கட்சி பேதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவி வருவதாகவும் கூறினார்.

இவ்வாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு இத்தொகுதில் உள்ள 5,500 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதோடு 141 மசூதிகளுக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தினசரி அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு இவ்வாண்டு நோன்புப் பெருநாளுக்கென்று சுமார் நான்கு லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.

பொது மக்களுக்கான இதுபோன்ற சேவைகளைத் தாம் தொடர்ந்து செய்து வருவதாகவும் எனவே அரசியலில் மோத நினைப்பவர்கள் பதாகைகளைக் கிழிப்பது, விளம்பரப் பலகைகளில் சாயம் வீசுவது போன்ற அநாகரிகமான நடவடிக்கைகளில் இறங்காமல் பொதுத் தேர்தலில் களம் இறங்கி தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்று கூறிய அவர், இச்செயலைப் புரிந்தவர்கள் மீது காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டத்தோ சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here