எதிரிக்கு எப்போதும் முதல் வணக்கம் !

வெற்றிஆமாம் வெற்றிதான்!

இந்த வார்த்தையின் அர்த்தம் அனைவருக்கும் புரியும். அவரவர் கையில், எண்ணத்தில், கவனத்தில், செயலில், மனத்தில் விதைத்துக்கொண்ட அல்லது சபதம் எடுத்துக்கொண்டவற்றில் தேர்ச்சிப் பெற்றுவிட்டால் அதன் அடையாளம் வெற்றி.  இன்னும் அதிகமான, முதன்மை தேர்ச்சிபெற்றுவிட்டால் கூடுதல் வெற்றி.

இந்த வெற்றியின் எதிர்ப்பதம் என்ன என்பதற்கு அதிக விளக்கங்கள் தேவையில்லை. எவரைக்கேட்டாலும் இது என்னவென்றும் இதற்கு அர்த்தம் யாதென்றும் கூறிவிடுவர்.

வெற்றியை சிலர் மட்டுமே நுகரக்கூடும். வெற்றி என்பது மிகச்சுலபமாகக் கிடைக்கும் என்பதில்லை. மிக எளிதாகவும் நெருங்கிவிடவும் முடியாது. சிலர் இமாலய முயற்சி என்பார்கள். 

வெற்றியை ஒருதாயின் பிரசவத்திற்கு ஒப்பிடலாம் என்றாலும் தவறில்லை. பெரிய வலிக்குப்பின் , மன வலிமையைச் சோதிக்கக் கூடிய பெருமுயற்சியாகும். 

வெற்றி பெற்றவர்களுக்குப் பின்னால் பெரிய, ஆபத்தான,சோகமான, விபரீதமான , கதைகள் இருக்கும். ஆனால், வெற்றிபெற்ற பின் கூடுதாலான மகிழ்ச்சி தானாகவே வாசலில் வரவேற்கும். இதையௌம் தடுக்க முடியாது.

இந்த வெற்றி எதனால் கிடைத்தது. ஒரு உதாரணம் சொல்லலாம். ஒரு குழந்தை நடக்கப்பழகும்போது பல தடவை விழுந்து எழுகிறது, எழுந்து விழுகிறது. நீண்ட முயற்சிக்குபின் படிப்படியாக எழும் முயற்சியில் வெற்றியடைகிறது . அதே குழந்தை விழும்போதெல்லாம் வெறுப்படைந்திருந்தால் அதற்கான பரிசு வெற்றியாக இருக்காது. இதனால்தான் அனைவரும் குழந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு வெற்றியைன் இலக்கைத் திட்டமிடவேண்டும்!.

சறுக்கும்போதெல்லாம் குழந்தையாகிவிடவேண்டும். அப்போதெல்லாம் வெற்றியின் எல்லை தொடுதூரத்திலேயே இருப்பதை உணர முடியும். இதன் பெயர் விடாமுயற்சி.

குழந்தைகளிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொள்ள முடியும் . இதுதான் வெற்றிக்கான முதல் பாடம் . அக்குழந்தை முயலாதிருந்தால் அதன் பெயர் முடம் என்றாகியிருக்கும்.

முடத்தின் எதிரியாக இருக்கும் ஒன்றன்பெயர் எதுவாக இருக்கும் என்பதற்கு விளக்கம் தேவையே இல்லை. சம்மட்டி அடியாய் அது தெரிந்துவிடும்!

சிறு துரும்பும் உதவும் என்றொரு வார்த்தை இருக்கிறதே!அப்படியென்றால் வெற்றியின் எதிரியும் உதவலாம் என்பதையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பதும் நல்லதுதானே!

ஆமாம், வெற்றியின் எதிரி இல்லாவிட்டால் வெற்றி என்பதை எப்படித்தான் மதிப்பிட முடியும்?  எதிரிகள் இல்லாவிட்டால் வெற்றி என்பது முயற்சியில் வெளிப்படாது. அதன் வலிமை புரியாது. 

மகிழ்ச்சியான வெற்றியைத் தருகின்ற எதிரியை மறந்துவிடவும் முடியாது . வெற்றியை மிகச்சுலபமாகப் பெறவும் முடியாது என்பதை மிகத்தெளிவாக உணர்த்தும் எதிரிக்கும் சம பலம் உண்டு. அது இருள்போலத் தெரியும். காலச்சக்கரத்தின் மறுபக்கம் அது.

அதனால் தான் வெற்றியின் ஏணிப்படியாக எதிரிகள் இருக்கிறார்கள் என்பதை எவர் ஒப்புக்கொள்கிறாரோ  அவரே வெற்றியாளர் என்றும் கூறலாம்.

இது ஏன்  இப்படி என்பதற்கெல்லாம் அவரவர் அனுபவமே சான்று என்பதால் வெற்றியைத்தேடுங்கள். வெற்றியத்தேடத்தொடங்கும் போதே எதிர்ப்பும் கூடவே வரும். இதுதான் விதி! விதியை மதியால் வென்றால் வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

எதிரி என்பவர் நம்மை மூன்னேற்றத்துடிக்கும் படிகள் போன்றவர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here