பீதியைப் போக்குங்கள்- மீதிகள் தொடரும்

சிறப்புக்கட்டுரை

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குப் பதிந்து கொள்ளும் முறை மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. சுகாதார அமைச்சின் வலைத்தளத்தில் நுழைந்து பதிவு செய்வது இமாலய சிக்கலாக உள்ளது.

உயர் ரத்த அழுத்தம், இருதயக் குழாயில் ஸ்டென்ட் என்று வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் தன் பெற்றோருக்குத் தடுப்பூசிப் பதிவுக்கு வழி தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் 24 வயது மகள் ஷர்மிளா.

தன் பெற்றோருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்யும் முயற்சி தோல்வி கண்டதை அடுத்து தன் இதயம் நொறுங்கிப் போய்விட்டதாகவும் எரிச்சலின் உச்சத்தில் கண்ணீர் சிந்துவதைவிட வேறு வழியில்லை என்றும் குமுறுகிறார் அந்த மகள்.

60 வயது, அதற்கு மேலான வயதினருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் பதிவு கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு, ஜோகூர், கூச்சிங், மிரி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதற்காக கிட்டத்தட்ட 12 லட்சத்து 40 ஆயிரம்   சொட்டுகள் தயாராக இருக்கின்றன.

இதே திட்டத்தின் கீழ் 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு 3 லட்சம் சொட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்திற்குள் அதற்கான பதிவு நிறைவு பெற்று விட்டது.

ஆன்லைன் பதிவில் ஏற்பட்டுள்ள தாமதம், சிக்கல் மக்கள் மத்தியில் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்பில் கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாதம் மீதான சிறப்புக் குழு வலைத்தளத்தில் மக்களின் கருத்துகள் அனல் கக்குவதுபோல் உள்ளன.

மலேசியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. முன்னுதாரணம் காட்டவும் வழியில்லை. ஆசியாவில் மிகப்பெரிய கோவிட்-19 தொற்றுகளைப் பதிவு செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.

ஆனால் அந்நாட்டின் தடுப்பூசித் திட்டத்தை நெருங்க முடியாத தூரத்தில் நாடு இருக்கிறது.

நாட்டில் கோவிட்-19 தொற்று ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகின்றது. பாதிக்கப்பட்டோர், இறப்போர் எண்ணிக்கை அச்சமூட்டுகிறது. நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 7,857. இது சில தினங்களில் 10 ஆயிரத்தைத் தாண்டும் என்ற பயம் மக்களைக் கவ்விக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு 10 லட்சம் மக்களுக்கும் சராசரியாக ஏழு நாட்களில் 185.3 புதிய தொற்றுகள் மலேசியாவில் பதிவு ஙெ்ய்யப்படுகின்றன. இதே அளவில் இந்தியாவில் 184.99 ஆகவும் அமெரிக்காவில் 76.31 ஆகவும் புதிய தொற்றுகள் பதிவாகின்றன என்று ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.

ஆனால், இவ்விரு நாடுகளுடன் ஒப்பிடுகையில் கோவிட்-19 தடுப்பூசி போடும் விவகாரத்தில் மலேசியா இன்னமும் பின்தங்கியே இருக்கிறது. மே 22ஆம் தேதி வரை நாளொன்றுக்கு ஒவ்வொரு 100 பேருக்கு 0.26 விகிதாசாரத்தில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

கம்போடியாவில் 0.47, சிங்கப்பூரில் 0.66 என்ற நிலையில் தடுப்பூசி போடும் அளவு இருக்கிறது. தடுப்பூசி போடும் பந்தயத்தில் மலேசியா ஆமை வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதையே இத்தரவுகள் காட்டுகின்றன.

அடுத்தக் கட்டத்தை எட்டுவதற்கு மலேசியா இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. கடந்த வாரம் தொடக்கம் வரை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3 விழுக்காட்டினர் மட்டுமே கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் 25.3 விழுக்காடு, கம்போடியாவில் 10 விழுக்காடு என்ற தகவலை தரவு  சொல்கிறது.

தடுப்பூசித் திட்டம் முறைப்படுத்தப்பட வேண்டும். நிர்வகிப்பு முறையில் மாற்றங்கள் அவசியமாகிறது. கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தற்போதைய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு 12 மணி நேரமாக விரிவுபடுத்த வேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் இன்னமும் மத்திய அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்நிலையில் அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட வேண்டும்.

மக்கள் பயத்தைப் போக்குவதுதான் இன்றைய தலையாய இலக்காக இருக்க வேண்டும்.

 

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here