இந்தியரையும் சீனரையும் பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமனம் செய்வீர்!

தூர நோக்கு சிந்தனை துறையாக மாறட்டுமே!

அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் 5 துணைவேந்தர்கள் பதவி காலியாக இருக்கிறது. இது மிகவும் அபூர்வம். இன்றைய காலகட்டத்தில் எதுவுமே சாத்தியம் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வோம். இன்று இதுதான் உண்மையான நிலை.
இதுவரை நடந்திராத; நாம் கண்டிராத ஒன்றாக இவ்விவகாரம் தற்போது பார்க்கப்படுகிறது. துணைவேந்தர்கள் இல்லாமல் 5 அரசாங்க பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இவ்விவகாரம் குறித்து டத்தோஸ்ரீ அஸ்மான் உஜாங் ஓர் அருமையான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இது சர்ச்சைக்குரியதுதான் என்றாலும் அவரது தூரநோக்குப் பார்வையில் சரியானதாகத்தான் உள்ளது.

மலாய் சமூகம் கண்டிப்பாக எகிறி குதிக்கும். டத்தோஸ்ரீ அஸ்மானை ஓர் இனத் துரோகியாக முத்திரைக் குத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டத்தோஸ்ரீ அஸ்மான் ஒரு சமான்யர் அல்லர். நாட்டின் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் 52 ஆண்டுகள் வரலாற்றில் தலைமை ஆசிரியராக, தலைமைச் செயல் அதிகாரியாக 37 ஆண்டுகள் சேவையாற்றியவர்.

பணி ஓய்வு பெற்றதும் 2016இல் பெர்னாமாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 2020, ஜனவரி 31ஆம் நாள் அவரின் ஒப்பந்தக காலம் நிறைவு பெற்றது.

பெர்னாவில் இந்த மூன்று பெரிய பதவிகளை அலங்கரித்த முதல் நபர் என்ற வரலாற்றையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

டத்தோஸ்ரீ அஸ்மான் மலேசிய பத்திரிகைக் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்திருப்பதோடு ஆசிய பசிபிக் செய்தி நிறுவனங்கள் அமைப்பின் தலைமைச் செயலாளராகவும் பணி செய்திருக்கிறார்.

விசாலமான அனுபவமும் பரந்து – விரிந்த தூரநோக்குப் பார்வையும் கொண்ட டத்தோஸ்ரீ அஸ்மான், பிரதமர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அமலாக்கப் பிரிவுகளின் தலைவர்கள் என அனைவராலும் போற்றி மதிக்கப்படக்கூடியவர்.

இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்தான் ஒரு முக்கியமான ஆலோசனையை முன் வைத்திருக்கிறார். அது என்ன?

காலியாக இருக்கும் இந்த 5 துணைவேந்தர்கள் பதவிகளில் மலாய்க்காரர் அல்லாத பேராசிரியர்களை நியமனம் செய்து ஒரு புதிய வரலாற்றுப் பதிவுக்கு வித்திடுங்கள் என்று ஒரு பரிந்துரையை முன் வைத்திருக்கிறார்.

நெற்றிப் பொட்டில் நேரடியாக அடித்ததுபோன்று இக்கருத்தை முன் வைத்திருக்கும் அவர், ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதற்கு நடப்பு அரசாங்கத்திற்கு இதுவே தக்கத் தருணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக உயர்கல்வி அமைச்சு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்தை முன்னெடுக்க வேண்டும். முதல் பெண் உயர்கல்வி அமைச்சரான டத்தோ நொராய்னி அமாட், ஆண் அமைச்சர்கள் செய்யத் துணியாத இந்த நியமனங்களை அரசியல் எல்லைகளைக் கடந்து வந்து ஒரு முன்னுதாரணமாகச் செய்திட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அஸ்மான் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த நியமனங்கள் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே அன்றி அரசியல் நியமனங்களாக இருக்கக்கூடாது என்பதை அவர் மிகத் துணிவாகத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

நாட்டில் கிட்டத்தட்ட 20 அரசாங்க பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. துணைவேந்தர்கள், உதவி துணைவேந்தர்கள் பதவி நியமனங்கள் பெரும்பாலும் அரசியல் பதவிகளாகவே இதுநாள் வரை இருந்து வருவது வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.

தகுதிகள் நிறைந்த மலாய்க்காரர் அல்லாத கல்வியாளர்களை இப்பதவிகளில் நியமனம் செய்யாது ஓரங்கட்டுவது கல்வித் துறைக்கு செய்யப்படும் மிகப்பெரிய ஒரு துரோகம் என்பதை டத்தோஸ்ரீ அஸ்மான் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

பல ஆண்டுகளாகவே இந்தப் பாரபட்சம் நடக்கிறது. ஒரு புதிய தொடக்கமாக ஒரு சீனர் ,  ஓர் இந்தியர் என  காலியாக இருக்கும் 5 இடங்களில் இரண்டில் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்படட்டும். கல்விக்கு இனம் கிடையாது.

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here