வங்கியில் பண வைப்பு இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த வேலையிழந்த ஆடவர் கைது; பினாங்கில் சம்பவம்.

ஜார்ஜ் டவுன் ( ஜூன் 24) :
நேற்று இரவு, ஜூன் 23, பாலிக் புலாவில் உள்ள ஒரு வங்கியில் ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த 39 வயது ஆடவர் ஒருவர் பண வைப்பு இயந்திரத்தை (CDM) ஐ உடைக்க முயன்றபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பினாங்கு, லிண்டாங் புக்கிட் பெனாராவில் உள்ள ஒரு அம் பேங் (Ambank) கிளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இச் சம்பவம் பற்றி தென்மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ்.பி. கமருல் ரிசால் ஜெனால் கூறுகையில், வங்கியின் அலாரம் இரவு 9.40 மணிக்கு அணைக்கப்படுவதைக் கேட்ட வங்கியின் உதவி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த போலீசார் வங்கிக்கு விரைந்து சென்று சந்தேக நபரை கைது செய்தனர் என்றும் வங்கியில் உள்ள இரண்டு சிடிஎம் இயந்திரங்களில் ஒன்றின் தடைக் கதவை குறித்த ஆடவர் உடைத்தார், ஆனால் பணத்தை திரும்பப் பெறும் இடத்தை திறக்க முடியவில்லை என்றும் அந்த இயந்திரத்தை உடைப்பதற்குள் சந்தேக நபரை போலீசாரல் கைது செய்யப்பட்டார் என்றும் கூறினார்.

சிடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்கு அந்த நபர் ஒரு உலோக கம்பியைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

“சம்பவ இடத்தில் நடந்த சோதனையில் சந்தேக நபர் தனியாக இந்தக் குற்றத்தைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் எந்திரத்தின் வெளிப்புறம் மட்டுமே சேதமடைந்துள்ளதால் அவரால் எந்தப் பணத்தையும் எடுக்க முடியவில்லை.

மேலும் விசாரணையில் தெரியவருவதாவது, சந்தேகத்திற்குரிய நபர் தனிமையில் உள்ளவர் என்றும் வேலை இல்லாததால் குறிப்பிட்ட ஆடவர் நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார் என்பதும் தெரிய வருவதாக அவர் கூறினார். அத்தோடு அந்த நபர் ஜார்ஜ் டவுனில் இருந்து பாலிக் புலாவுக்கு பஸ்ஸில் சென்றதாகவும் கமாருல் கூறினார்.

“அவர் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக இந்த பணம் வைப்பிலிடும் இயந்திரத்தை உடைக்கும் நோக்கம் இருந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் சந்தேக நபருக்கு போதைப்பொருள் குற்றங்கள் சம்பந்தப்பட்ட நான்கு முந்தைய பதிவுகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 380, பிரிவு 511, மற்றும் பிரிவு 427 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here