பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12:
மலேசியாவில் தினசரி கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் விகிதம் ஐக்கிய இராச்சியத்தை விட மிக உயர்ந்த நிலையில் உள்ளது.
உலகிலேயே தினசரி அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விகிதம் ஐக்கிய இராச்சியம் முதலிடத்தில் இருந்தது. தற்போது மலேசியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்கும் போது, மலேசியாவின் தினசரி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விகிதம் ஜூலை 9 ஆம் தேதி அன்று 100 பேருக்கு 0.96 ஐ எட்டியுள்ளது, இது ஐக்கிய இராச்சியத்தின் மிக உயர்ந்த விகிதமான 0.89 ஐ விட (மார்ச் மாதம்) அதிகமாகும் என அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
“எங்கள் தடுப்பூசி விகிதம் இங்கிலாந்தின் தடுப்பூசி விகிதம் உச்சத்தில் இருந்தபோது இருந்ததை விட அதிகமாகவே உள்ளது,” என்று அவர் கூறினார்.
ஜூலை 9 வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு 100 பேருக்கும் தினசரி சராசரியாக 1.3 தடுப்பூசிகளுடன் சிங்கப்பூர் முதலிடத்தையும், மலேசியா (0.96), கம்போடியா (0.74) புருணை (0.66), தாய்லாந்து (0.36), இந்தோனேசியா ( 0.31), லாவோஸ் (0.23), பிலிப்பைன்ஸ் (0.23), வியட்நாம் (0.02), மியன்மார் (.01) ஆகிய ஆகிய நாடுகளின் புள்ளி விவரங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த மாதத்தில் நாடு 14.4 மில்லியன் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுகிறது என்றும் இது தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தை மேலும் அதிகரிக்க உதவும் என்றும் கூறினார்.
சனிக்கிழமையன்று, நாடு முழுவதும் மொத்தம் 324,745 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
நாட்டின் வயது வந்தோருக்கான (adults) மக்கள்தொகையில் சுமார் 32.7% பேர் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர்,மேலும் 14.6% பேருக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




















