கோலாலம்பூர்:
சபாவிலுள்ள ஒரு பள்ளி விடுதியில் மாணவி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குறித்த காணொளி காவல்துறையும், அம்மாநில கல்வித்துறையும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 30 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார். மற்றொரு சிறுமி அவர் அருகில் நின்றுகொண்டு, அவரை மிரட்டும் தொனியில் கைகளை அசைத்துப் பேசி, பின்னர் அந்த அழும் சிறுமியின் முடியைக் கலைத்துத் துன்புறுத்துகிறார்.
இது குறித்துப் பேசிய தெனோம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் அஸ்மிர் அப்துல் ரசாக் (Supt Azmir Abdul Razak), இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், வீடியோவில் இருக்கும் சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சபா கல்வித்துறை இயக்குநர் டத்தோ ராய்சின் சைதினும் (Datuk Raisin Saidin) இச்சம்பவம் குறித்து கல்வித்துறை விசாரித்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மலேசியப் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்களும் அதிர்ச்சியும் எழுந்துள்ளன. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் மலேசியாவையே உலுக்கிய 13 வயது மாணவி சாரா கைரினா மகாதிர் (Zara Qairina Mahathir) என்பவரின் மரணத்தைத் தொடர்ந்து, இந்த புதிய வீடியோ மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாரா கைரினா, தனது பள்ளி விடுதியில் மூத்த மாணவர்களால் (Seniors) துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், விடுதியின் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
சாரா கைரினாவின் மரணம் மலேசியா முழுவதும் பெரும் போராட்டங்களுக்கும், நீதிமன்ற வழக்குகளுக்கும் வழிவகுத்துள்ளது. இது தொடர்பான மரண விசாரணை (Inquest) தற்போது நடந்து வருகிறது, இது வரும் அக்டோபர் 23-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















