பிரசவத்திற்கு இடமில்லையாம்- சுகாதாரத்துறை ஏற்க மறுப்பா?

 

தன்னுடைய குழந்தையைப் பிரசவிப்பதற்கு அரசாங்க மருத்துவமனையில் இடமில்லை. ஓர் அரசாங்க மருத்துவமனைக்குச் சென்ற ஒரு மாது பிரசவிக்க இடம் இல்லை என்று  திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.

முன்னதாக வேறு இரண்டு அரசாங்க மருத்துவமனைகளிலும் அவருக்கு இதே நிலை. இறுதியில் ஒரு காரில் அவர் பிரசவித்திருக்கிறார். பின்னர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர் சிகிச்சகை்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பிரசவத்திற்கு இடமில்லை என்று சொல்லி அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைத் திருப்பி அனுப்பியது தனக்கு மிகப்பெரிய வேதனையைத் தந்திருக்கிறது. அதற்காக வருத்தப்படுவதாக தாதி ஒருவர் சம்பவத்தை நினைவுகூர்ந்திருக்கிறார்.

இதற்கு மத்தியில் ஐந்து கர்ப்பிணிகள் அரசாங்க மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்திருக்கின்ற தகவலும் பேரதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.

நம்முடைய சுகாதார வழிமுறை எந்த அளவுக்கு அபாயத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவம் ஓர் அளவுகோலாக அமைந்திருக்கிறது.

மிகுந்த எரிச்சலிலும் மன உளைச்சலிலும் உழன்றுகொண்டிருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் தகவல் ஊடகங்களிடம் இத்தகவல்களைச்  சொல்லும் அளவுக்குத் துணிந்துவிட்டனர்.

தகவல் ஊடகங்களிடம் பேசக்கூடாது – முன் அனுமதி இன்றி அறிக்கைகள் விடக்கூடாது என்று சுகாதார அமைச்சு வாய்ப்பூட்டுப் போடும் நிரந்தர ஆணையைப் பிறப்பித்திருக்கிறது.

அதையும் மீறி அவர்கள் வாய் திறந்திருக்கிறார்கள் என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்குக் கட்டியங்கூறுவதாக அமைந்திருக்கிறது.

கோவிட்-19 கொடுந்தொற்று கடந்த 18 மாதங்களாக உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இத்தொற்றைத் தடுப்பதில் ஒரு முன்னுதாரண நாடாக மலேசியா போற்றப்பட்ட காலமும் இருந்தது.

ஆனால், இப்போதோ ஒரு பேரிடர் காலத்தில் மலேசியா இருக்கிறது. கோவிட்-19 கொடுந்தொற்றைத் தடுக்க முடியாமல் அதன் பாதிப்புகளும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், லாபுவான் மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகப்பட்ச கொள்ளளவை மிஞ்சிவிட்டது என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

நாட்டில் சுகாதார அமைப்புமுறை எதிர்பாராத அளவுக்கு சரிந்துள்ளது என்று சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு டாக்டரும் ஒரு தாதியும் மனம்விட்டுப் பேசியிருக்கின்றனர்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படாத மற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவர்கள் மரணத்தின் பிடியில் இருந்தாலும் சிகிச்சை அளிக்க இடமில்லாமல் நிராகரிக்க வேண்டியிருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க இன்னொரு பக்கம் முன்களப் பணியாளர்களான டாக்டர்கள், தாதியர், உதவிப் பணியாளர்கள் நோயாளிகளாக மாறுவது பெருங்கொடுமையாக இருக்கிறது.

ஓர் உதாராணத்திற்கு கெடா, சுங்கைபட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் டாக்டர்கள், தாதியர்கள் உட்பட 40 மருத்துவ முன்களப் பணியாளர்கள் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதைச்  சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

மனித வளங்கள் பற்றாக்குறையால் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. இந்நிலைமை இப்படியே தொடருமாயின் நாட்டின் சுகாதார அமைப்புமுறை நிலைகுத்திவிடும் என்று டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் எச்சரித்திருப்பதையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் மருத்துவத் துறைக்கு அவசரத் தேவையாக உள்ள நிதி ஒதுக்கீட்டை விரைந்து விழங்கிட வேண்டும்.

இத்துறைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்களப் பணியாளர்களுக்கு உரிய அனுகூலங்களையும் தயங்காமல் – தாராளமாக வழங்கிட வேண்டும்.
இதைவிட மிகப்பெரிய ஒரு பேரிடரை நாடும் தாங்காது,  மக்களும் தாங்க மாட்டார்கள்!

 

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here