தணியுமா இறப்பு என்னும் வேக்காடு !

 

மலேசியர்கள் கிட்டத்தட்ட 18 மாதங்களாக தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து – மறந்து பயத்திலேயே வாழும் ஓர் இக்கட்டான நிலையில் இருக்கின்றனர்.

திடீர் திடீரென உறவுகள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் சாவு செய்தி கேட்டு அனலிலிட்ட புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். கைக்குழந்தை முதல் முதியோர் வரை கொரோனா கோரத் தாண்டவத்திற்கு இரையாகி வருகின்றனர்.

மகிழ்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை எதிர்பார்த்து பெற்ற காலம் போய், கைத்தொலைபேசியில் அழைப்பு வந்தாலே அலறும் காலமாக உருமாறிவிட்டது.

அடங்கி ஒடுங்கி வந்த கொரோனா, சபா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்தது. அதுவும் ஓய்ந்து வந்த வேளையில் அதற்குப் பின் வந்த ஒரு பெருநாள் உணவுச் சந்தை போன்றவற்றில் மக்கள் கூட்டம் அலைமோதியதில் மீண்டும் எழுச்சிப் பெற்றது.

இப்போது பாதிப்புகளும் மரணங்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அரசாங்க மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களைக்கூட வைக்க முடியாமல் அவசர சிகிச்சபை் பிரிவுகளும் சாதாரண வார்டுகளும் தற்காலிக பிண அறைகளாக மாறி வருகின்றன.

அங்கேயும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டு குளிரூட்டி பொருத்தப்பட்ட கொண்டெய்னர்கள் தேவைப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டன .

மஇகா தரப்பில் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு 3 கொண்டெய்னர்களும் செலாயாங் மருத்துவமனைக்கு 1 கொண்டெய்னரும் வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படியெல்லாம் பார்த்துப் பழக்கப்படாத, நமக்கு இன்றைய இந்நிலை உயிர் பயத்தைத் தந்து கொண்டிருக்கிறது. சொர்க்கப் பூமியான மலேசியாவிலா இக்கொடிய நிலை என்ற பீதியோடு ஆச்சரியப்பட வேண்டியுள்ளது.

மயானங்களில் ஒரே நேரத்தில் 19 சவ வண்டிகள் வரிசைபை் பிடித்து மனித உடல்களைப் புதைக்கும் காட்சிகள் இதயங்களைப் பிழிந்து எடுப்பதாக உள்ளன.

மின் தகன மையங்களிலும் அதே நிலை. ஆனால் அங்கு நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதாவது 4 அல்லது 5 உடல்களைத்தான் தகனம் செய்ய முடியும். கூடிப் போனால் அந்த மின் தகன நிலையமே வெடிக்கும் அபாயமும் உள்ளது.

நிச்சயம் என்பது நிச்சயமற்றதாகிப் போயிருக்கிறது. இறந்து போன, உயிருக்கு உயிரான உறவுகளின் முகங்களைக் கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் காணொளி பதிவுகள் மூலம், ஸும் வழியாகவும் பார்த்து கண்ணீர் வடிக்கும் நிலையில் இருக்கிறோம்.

முஸ்லிம் சகோதரர்களைப் பொறுத்தவரை சவ வண்டி சாலையோரத்தில் வீட்டின் முன் வந்து நிற்கிறது. உறவுகள் எட்டி நின்று அதன் கண்ணாடி வழி பார்த்துத் துடிக்கும் காட்சிகள் உயிர்த் துடிப்பை நிறுத்தி விடும்போல் உள்ளது.

மக்கள் இப்படி அல்லாடிக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கத் தரப்பில் கொரோனா தொற்றைத் தடுக்கும் முயற்சிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ,  அதிகாரிகளின் முரண்பாடுகள் நிறைந்த அறிக்கைகள் -தகவல்கள் பெரும் எரிச்சலைத் தருவதாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்களும் பொதுமக்களும் குறிப்பாக இளைய தலைமுறையினரும் சினம் கொண்டு வெடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் கோபத்தின் உச்சத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன. ஏற்கெனவே வேலை இழப்பு, வருமானம் இழப்பு, வீட்டில் முடக்கம், கடன் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளில் உழன்று அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசாங்கத்தின் இரட்டைப் போக்குகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவிட்-19 எஸ்ஓபி விதிமுறைகளை மீறியதற்காக பர்கர் வியாபாரி ஒருவருக்கு அமலாக்கப் பிரிவினர் 50,000 வெள்ளி அபராதம் விதித்தனர். ஒரு சாமானியனான அவர், சினத்தின் உச்சத்திற்குப் போய், அபராதம் செலுத்த தன்னிடம் பணம் இல்லை. வேண்டுமானால் இந்தக் கடையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொந்தளித்தார்.
ஆனால், அப்பட்டமாக விதிமுறைகளை மீறும் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மந்திரி பெசாருக்கு தலா 2,000 வெள்ளி அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது.

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து சாமானிய மக்கள் எரிமலையாகப் பொங்கிக் கொண்டிருக்கின்றனர். வரும் பொதுத்தேர்தலில் அவை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம்.

 

– பி.ஆர். ராஜன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here