சரவாக்கில் 76 பேருக்கு டெல்தா மாறுபாடு கொண்ட வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

கூச்சிங், ஜூலை 21:

கோவிட் -19 டெல்தா மாறுபாடுடைய 76 தொற்றுக்கள் சரவாக் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சரவாக்கின் யுனிவர்சிட்டி மலேசியா சுகாதார மற்றும் சமூக மருத்துவ நிறுவனம் (IHCM) தெரிவித்துள்ளது.

ஐ.எச்.சி.எம் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டேவிட் பெரேரா கூறுகையில், ஜூன் 7 முதல் ஜூலை 13 வரை பதிவாகிய நேர்மறை தொற்றுக்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்றும் நிறுவனத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கோவிட் -19 வைரஸ் வகைகளை கண்காணிப்பதில் தங்கள் நிறுவனம் மேற்கொண்ட முயற்சியில் இதுவும் ஒன்றாகும் என்றும் கூறினார்.

புதிய டெல்தா வகை தொற்றுக்களில் 52 கூச்சிங்கில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

“மருத்துவமனை செந்தோசா, சதோக் காவல் நிலையம் மற்றும் கூச்சிங்கில் உள்ள பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அவை அடையாளம் காணப்பட்டுள்ளன” என்று அவர் புதன்கிழமை (ஜூலை 21) ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

செரியானில் 11, ஸ்ரீ அமானில் 5, சமரஹானில் 3 மற்றும் சிபு, மிரி மற்றும் பெந்தோங்கில் தலா ஒருவருக்கும் இத் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக டாக்டர் பெரேரா தெரிவித்தார்.

“வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்கு வந்தவர்களில் A, B பிரிவுகளின் கீழ் தலா ஒருவருக்கு இத்தொற்று இருந்ததாக நாங்கள் கண்டறிந்தோம்,” என்றும் அவர் கூறினார்.

முதன் முதல் டெல்தா மாறுபாடு தொற்று ஜூன் 18 அன்று சரவாக்கில் கண்டறியப்பட்டது. மேலும் ஜூலை 4 ஆம் தேதி முதல் நேற்று வரை மேலும் 16 தொற்றுக்கள் கூச்சிங்கில் கண்டறியப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here