பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி : கமல்ஹாசன் வேண்டுகோள்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சாதி, மதம் கடந்து அனைவரும் உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவ மையத்தில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடங்கிவைத்து கமல்ஹாசன் பேசும்போது, ‘கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் போன்ற பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.
அவர்களது தைரியம் , தியாகத்தை பார்த்தே நாங்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவர்களும், செவிலியர்களும் அயராது பணி செய்து வருகின்றனர். உதவி செய்ய மனம் படைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகள், பணக்காரர்கள் என்ற வேறுபாடு இன்றி கொரோனா பரவியது. அதுபோல மக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதி, மதங்களைக் கடந்து உதவ வேண்டும்’ என்றார்.
முன்னதாக கொரோனா தொற்றால் வருவாய் இழந்து வறுமையில் வாடும் சிறு வியாபாரிகளுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தள்ளுவண்டி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.