2022 முதல் இல்லத்தரசிகளும் SOCSO மூலம் நன்மைகள் பெறலாம்; மனிதவள அமைச்சர் தகவல்

பெட்டாலிங் ஜெயா: சமூக பாதுகாப்பு அமைப்பின் (SOCSO) கீழ் இல்லத்தரசிகள் நன்மையடையும் திட்டம் 2022 இல் அமல்படுத்தப்படுவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனித வளத்துறை அமைச்சர் எம் சரவணன், ஜூலை 14 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இல்லத்தரசிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்த போது அமைச்சரவை அதனை ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

“தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 150,000 இல்லத்தரசிகள் அரசாங்கத்தால் உள்ளடக்கப்படுவார்கள், மற்றய இல்லத்தரசிகள் சுய விருப்பத்தின் படி பங்கேற்கலாம்” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த திட்டம் விபத்துகள், நோய்கள் அல்லது இறப்பு போன்ற உள்நாட்டு சம்பவங்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்றும், இது நாடு முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகளும் நன்மை பெறும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் “இல்லத்தரசிகள் பாதுகாப்புப் பொருளாதாரத்திற்கு பங்களித்த போதிலும், அவர்களுக்கான எந்த சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள் தற்போது இல்லை” என்றும் அமைச்சர் சரவணன் தெரிவித்தார்.

இல்லத்தரசிகள் குடும்ப அமைப்பு மற்றும் தேசிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால், இல்லத்தரசிகளின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க சமூகப் பாதுகாப்பு அவசியம் என்றும் அவர் மேலும் கூறினார்.

“தற்போது, ​​இல்லத்தரசிகள் சமூக பாதுகாப்பு மசோதாவின் வரைவு மனிதவள அமைச்சகம் மற்றும் அட்டர்னி ஜெனரல் துறையினரால் சரிபார்க்கப்பட்டு வருகின்றது என்றும் இச்செயல்பாட்டின் பின்னரே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியும்” என்றும் சரவணன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here