நீர் மாசடைவு காரணமாக கிள்ளான் பள்ளத்தாக்கின் 463 பகுதிகளில் நீர் விநியோகத்தடை

கோலாலம்பூர், ஆகஸ்டு 31:

இன்று காலை ஒரு பம்ப் ஸ்டேஷனில் நீர் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் ஐந்து பிராந்தியங்களில் உள்ள 463 பகுதிகள்  திட்டமிடப்படாத நீர் விநியோகத்தடையை எதிர்கொள்ளும் என்று ஆயிர் சிலாங்கூர் (Air Selangor) தெரிவித்துள்ளது.

ஆயிர் சிலாங்கூர் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் எலினா பசேரி இச்சம்பவம் பற்றி கருத்துரைத்த போது, ஜென்டிராம் ஹிலீர் மூல நீர் பம்ப் நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதை கண்டறிந்த பின்னர் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் காலை 11.10 மணிக்கு மூடப்பட்டதாக கூறினார்.

பெட்டாலிங்கில் சுமார் 172 பகுதிகளும், செப்பாங்கில் 194 பகுதிகளும்,  ஹுலு லங்காட்டில் 54 பகுதிகளும், புத்ராஜெயாவில் 23 பகுதிகளும் மற்றும்  கோலா லங்காட்டில் 20 பகுதிகளும் நீர் வெட்டால் பாதிக்கப்படும் என்றார் .

“ஆயிர் சிலாங்கூர் இணையதளம் மற்றும் ஆயிர் சிலாங்கூர் மொபைல் செயலி மூலம் நுகர்வோர் இந்த நீர் விநியோக இடையூறால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலைப் பெறலாம்,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன. (ஆயிர் சிலாங்கூர் இணையதள படம்)

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீர் வழங்குவதில் ஏற்பட்ட இடையூறைத் தொடர்ந்து ஆயிர் சிலாங்கூர் தனது அவசர மாற்று திட்டத்தை  செயல்படுத்தியதாக எலினா கூறினார்.

நுகர்வோரின் சுத்தமான தண்ணீரின் தேவையை தமது நிறுவனம் புரிந்துகொண்டது என்றும், குறிப்பாக கோவிட் -19 தொற்றுக்களின் தாக்கம் அதிகரித்துள்ள நேரத்தில் , தண்ணீர் இல்லாத இடையூறின் தாக்கத்தை குறைக்க முடிந்த அனைத்தையும் தமது நிறுவனம் செய்யும் என்றும் அவர் கூறினார்.

மேலும் “ஆயிர் சிலாங்கூர் எல்லா ஊடகங்களிலும், குறிப்பாக தொலைகாட்சி மற்றும் வானொலி போன்ற வெகுஜன ஊடகங்கள் மூலம் அவ்வப்போது தண்ணீர் விநியோக நிலைமை குறித்து அறிவித்துக் கொண்டு இருக்கும் என்றார்.

“இது தொடர்பான விசாரணைகள் மற்றும் புகார்களை இணையதளம் மற்றும் ஆயிர் சிலாங்கூர் மொபைல் செயலி மூலம் உதவி மையத்திற்கு சமர்ப்பிக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here