புரட்டாதி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாதா ? ஆன்மிகத்தில் அறிவியலை புகுத்திய முன்னோர்கள்

புரட்டாதி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.மற்ற தமிழ் மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், இந்த புரட்டாதி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளோம்.

ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?
தமிழ் மாதம் புரட்டாதி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம். அதற்கான உரிய விளக்கத்தை குழந்தைகளுக்கோ, அல்லது அசைவம் சாப்பிட விரும்புபவர்களுக்கோ சொன்னால் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

அறிவியல் காரணம்:
பொதுவாக புரட்டாதி மாதத்தின் போது தான் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலமாக உள்ளது. இதனால் இதுவரை பூமி வெயிலால் சூடாகி இருக்கும். மழை பொழியும் போது, அதை ஈர்த்து புவியின் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு, தன்னுள் இருக்கும் சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும்.

இதனால் புரட்டாதி மாதம் சூட்டை கிளப்பி விடும். இது வெயில் காலத்தில் சூடான காலநிலையைக் காட்டிலும் மிக மோசமான விளைவுகளை தரக் கூடியது. இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால், உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து, நம் உடல் நலனை மேலும் பாதிக்கச் செய்யும்.

இந்த காலத்தில் உடல் சூட்டால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகள் :

  • தோல் சூடாவதோடு, உலர்ந்து போகுதல்
  • அதிகமாக வியர்த்தல்
  • உடல் வெப்பநிலை 105 பேரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு
  • இதயத்துடிப்பு மற்றும் மூச்சு வாங்குதல் அதிகரிக்க வாய்ப்பு
  • வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும்

ஆன்மிக காரணம்:
ஜோதிடத்தில் 6வது ராசியாக அமைந்துள்ளது கன்னி ராசி. இந்த கன்னி ராசி அதிபதியாக புதன் பகவான் உள்ளார். மேலும் புதன் மகா விஷ்ணுவின் சொரூபம் என்பதாலும், புதன் பெருமாளுக்கு உரிய கிரகமாக பார்க்கப்படுகிறது.

புதன் சைவப்பிரியர் ஆவார். அதனால், அவர் ஆட்சி செய்யும் கன்னி ராசிக்கான மாதம் புரட்டாதியில், அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும் என சொல்லுகின்றனர்.

ஆன்மிகத்தில் அறிவியலை புகுத்திய முன்னோர்கள்:
உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர். அதோடு, இந்த காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் தான் புரட்டாதி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என முன்னோர்கள் ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.

நம் உடல் நலனுக்காக நம் முன்னோர்கள் கடைப்பிடித்த புரட்டாதி விரத முறையை, நாமும் கடைப்பிடித்து வாழ்க்கையை ஆரோக்கியமானதாக அனுபவிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here