வீடுகளுக்குள் புகுந்த எரிமலைக் குழம்பு: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ஸ்பெயின் நாட்டின் கனேரி தீவு பகுதிகளில் பெரியது முதல் சிறியதாக 8 தீவுகள் அமைந்துள்ளன. டெனெர்ஃப், ஃபியூர்டெவென்ச்சுரா, கிரான் கனேரியா, லான்சரோட், லா பால்மா, லா கோமரா, எல் ஹியரோ மற்றும் லா கிராசியோசா ஆகியவையே அவை.

லா பால்மா தீவில் சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. இதன் காரணமாக அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது. எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா சாலைகளிலும் காடுகளிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது.

கனேரி தீவுகளில் கடந்த 50 ஆண்டுகளில் நிகழும் முதல் எரிமலை வெடிப்பு இது என்று கூறப்படுகிறது. தீக்குழம்பு முன் எதிர்படும் வீடுகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும் தீக்கிரையாகி வருகின்றன. இதுவரை 100 வீடுகள் தீக் குழம்புக்கு இரையாகியுள்ளன.

இந்த எரிமலைக் குழம்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும் தனக்கு முன் எதிர்படும் அனைத்தையும் தீக்கிரையாக்கி வருகிறது. கடலை நோக்கி எரிமலைக் குழம்பு சென்றுகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு கருதி 500 சுற்றுலாப் பயணிகள் உட்பட 5000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  எரிமலை வெடிப்பு காரணமாக கரும்புகை அப்பகுதியை சூழ்ந்துள்ளதாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்லவிருந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு லா பால்மா தீவுக்கு விரைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here