பதின்ம வயதினருக்கு சினோவாக் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்

கோலாலம்பூர்: 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பதின்ம வயதினருக்கு சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று தெரிவித்தார்.

பதின்மவயதினருக்கான தடுப்பூசிகளில் ஃபைசர் தடுப்பூசிக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி இதுவாகும்.

பதின்ம வயதினரில் ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது ஃபைசர் தடுப்பூசி பெற தகுதியற்றவர்களுக்கு சினோவாக் தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிப்பதாக இன்று ஓர் அறிக்கையின் மூலமாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“சினோவாக் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான மதிப்பீடுகள் மற்றும் போதுமான தரவு கொடுக்கப்பட்டவுடன் இத்திட்டம் தொடரும்,” என்று அவர் கூறினார்.

இன்றைய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 20 அன்று இளம் பருவத்தினருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியது. அத்தோடு நாட்டில் 3.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

நவம்பர் மாதத்திற்குள் அவர்களில் 60 விழுக்காட்டினருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடுவதையும், 2022 அமர்வில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு முன்பு அவர்களில் 80 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here