நாளை அக்.6 மஹாளய அமாவாசை- அதன் சிறப்பு யாது என அறிவோமா?

புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கிறோம். இந்த அமாவாசைக்கு 14 நாட்கள் முன்னதாகவே மகாளய பட்ச காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்பட்டு நம் வீடு தேடி வந்து நாம் கொடுக்கும் தர்பணத்தை ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதித்து திரும்பிச் செல்வார்கள் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு மகாளய அமாவாசை புரட்டாசி மாதம் நாளை அக்டோபர் 6ஆம் தேதி வர இருக்கிறது. அன்றைய தினம் நாம் கொடுக்கும் திதியினால் நமக்கும் நமது குடும்பத்திற்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் எவ்வாறு நாம் கடமை ஆற்ற வேண்டி இருக்கிறதோ அதுபோல இறந்தவர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை என்று ஒன்று இருக்கிறது. இறந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை திதி கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகும்.

புரட்டாசி மாதம் எமனின் கோரைப் பார்வை வெளியே தெரியும் மாதமாக கூறப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் வரும் அமாவாசை அன்று பிதுர் பூஜை செய்வதனால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனவே இறுதி காலத்தில் எம பயம் இருக்காது என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மஹாளயபட்ச அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிமிதமாக பித்ருக்களின் ஆசி நிறைந்து இருக்கிறது.  நாம் கொடுக்கவிருக்கும் நீரையும், எள்ளையும் தேடி கோடிக்கணக்கான பித்ருக்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பார்கள். எனவே அவர்களின் மனம் திருப்தி அடையும்படி அன்றைய நாள் தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

ஒரு புரட்டாசி மாத அமாவாசை அன்று தர்பணம் செய்வது என்பது 14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்ததற்கான பலனை நமக்கு கொடுக்கிறது. அன்றைய நாள் கோவிலுக்குச் சென்று பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் வாங்கிக் கொடுப்பதும் கோடான கோடி புண்ணியத்தை கொடுக்கிறது.

இந்த புரட்டாசி மாத அமாவாசையில் இறந்தவர்களின் ரத்த சம்பந்தமான உறவுகள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் என்றால் திருப்தி என்று பொருள். அதாவது நாம் கொடுக்கும் எள் மற்றும் நீரை அவர்கள் எடுத்துக் கொண்டு திருப்தி அடைவதாகும். அவர்களின் மனது திருப்தியடைந்து நம்மை முழு மனதார வாழ்த்துவதென்பது நமது தலைமுறையையும் பல ஆண்டு காலங்கள் தழைக்க வைக்கும்.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் நமது வீட்டில் ஏதேனும் செய்வினை கோளாறுகள் இருந்தது என்றால் அவையும் விரட்டி அடிக்கப்படும். கடன் தொல்லை தீரும். அது மட்டுமல்லாமல் அன்றைய நாள் காக்கைகளுக்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவானும் அவருடைய சகோதரரான எமனும் ஒரே நேரத்தில் திருப்தி அடைவதாக சொல்லப்படுகிறது.

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பதன் மூலம் காரியத்தடைகள் நீங்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தீராத நோயும் தீரும். இவ்வாறு புரட்டாசி மாத மஹாளய அமாவாசையில் அனைவரும் தவறாமல் தர்பணம் கொடுத்து முன்னோர்களின் ஆசியை பெற்று வளமுடன் வாழ வேண்டும் என்று  இப்பதிவை முடித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here