போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவர் கைது; RM134,800 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ஜார்ஜ் டவுன், நவம்பர் 27 :

கடந்த திங்கட்கிழமை, இங்கு அருகிலுள்ள செபெராங் பிராய் தெங்காவில் (SPT) மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சோதனையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என நம்பப்படும் மூன்று பேரை போலீசார் கைது செய்ததுடன் RM134,800 மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் சயாபு ஆகியவற்றையும் கைப்பற்றினர்.

பினாங்கு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறைத் தலைவர் ஏசிபி முஸ்தபா கமால் கனி அப்துல்லா கூறுகையில், பெர்மாடாங் பாவ், SPTயில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவரிடமிருந்து 171.35 கிராம் எடையுள்ள 10 ஹெரோயின் பாக்கெட்டுகள் மற்றும் 2,296 வெள்ளி மதிப்புள்ள 10 பாக்கெட்டுகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும் RM1,325 மதிப்புள்ள 13.25 கிராம் சயாபு மற்றும் RM135 மதிப்புள்ள Eramin மாத்திரைகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டன.

மூன்றாவது சந்தேகநபர் புக்கிட் தெங்காவில் உள்ள ஒரு சாலையில், RM6,124 மதிப்புள்ள 457 கிராம் ஹெரோயின் வைத்திருப்பதைக் கண்டுபிடித்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டதாக முஸ்தபா கமால் கூறினார்.

மூன்று சந்தேக நபர்களின் கைதின் பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் மேலும் ஒரு சோதனையை மேற்கொண்டனர். அங்கு 55,275 வெள்ளி மதிப்புள்ள 4,125 கிராம் ஹெரோயின் மற்றும் 750 கிராம் எடையுள்ள 69,645 வெள்ளி மதிப்புள்ள ஹெராயின் இரண்டு பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக அவர் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு லோரி ஓட்டுநர் மற்றும் இரண்டு வேலையில்லாதவர்கள் உட்பட மூன்று சந்தேக நபர்களும் போதைப்பொருள் சோதனையில் நேர்மறையான பதிலை பெற்றனர் என்று அவர் கூறினார்.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 12,500 வெள்ளி மதிப்புள்ள இரண்டு நெக்லஸ்கள், இரண்டு மோதிரங்கள் மற்றும் ஒரு வளையல் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர் என்றும் அவர் கூறினார்.

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here