போதைப்பொருளைப் பதப்படுத்தி, விநியோகத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது; RM8.09 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ஷா ஆலம், நவம்பர் 29 :

கடந்த திங்கட்கிழமை, பூச்சோங்கில் சிறிய ஆய்வகமாக மாறியிருந்த ஒரு கடை வீட்டில், ஹெரோயின் பதப்படுத்தும் நடவடிக்கைகளை ரோயல் மலேசியன் போலீஸ் (PDRM) கண்டுபிடித்துள்ளது. மேலும் RM8.09 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களையும் கைப்பற்றியது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் டத்தோ ரஸாருடின் ஹுசைன் இதுபற்றிக் கூறுகையில், JSJN சிலாங்கூருடனான கூட்டு நடவடிக்கையில், கோம்பாக் மற்றும் பூச்சோங்கில் உள்ள சிறிய போதைப்பொருள் ஆய்வகம் உட்பட ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது என்றார்.

திங்கட்கிழமை நண்பகல் 12.10 மணி முதல் 4.30 மணி வரை நடந்த சோதனையில், 22 முதல் 42 வயதுக்குட்பட்ட 10 உள்ளூர் ஆண்கள், ஆறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் அனைவரும் ஹெரோயின் மற்றும் எக்ஸ்டஸி மாத்திரைகளை கிள்ளான் பள்ளத்தாக்கில் பதப்படுத்தி, விநியோகித்தலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

போலீஸ் சோதனையின் விளைவாக, ‘19.7 கிலோகிராம் ஹெராயின் (அடிப்படை), 43.1 கிலோ ஹெராயின், 3.2 கிலோ எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் 110 கிலோ MDMA பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து போதைப்பொருள்களும் 8.09 மில்லியன் வெள்ளி பெறுமதியானது’ என்று இன்று காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முஹமட்டும் உடனிருந்தார்.

‘தங்க முக்கோணப் பகுதியில் (Golden Triangle area) உள்ள அண்டை நாட்டிலிருந்து போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது’ என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக ரஸாருடின் கூறினார்.

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 2.039 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பல்வேறு சொத்துக்களையம் பறிமுதல் செய்துள்ளதுடன், 1988 ஆம் ஆண்டு ஆபத்தான மருந்துகள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் படி, போலீசார் அந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் கூறினார்.

“இந்தச் சோதனையின் போது, ​​10 வாகனங்கள், நகைகள், பங்குகள், முடக்கப்பட்ட கணக்குகள் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களின் சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஏனைய (சொத்துக்களின்) பறிமுதல்களின் மொத்த மதிப்பு RM10,129,237.55,” என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் ,ஒருவருக்கு மெத்தம்பேட்டமைன், ஆம்பெடமைன் மற்றும் கெட்டமைன் ஆகியன சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

“மேலும், குற்றப் பதிவுகளை மறுஆய்வு செய்ததில், எட்டு சந்தேக நபர்களுக்கு முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

“ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் (ADB) பிரிவு 39B இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் சந்தேகத்திற்குரியவர்கள் அனைவரும் நவம்பர் 23 முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here