இலத்திரனியல்-கட்டண சாதனையை எட்டிய முதல் அரசு நிறுவனமாக குடி நுழைவுத்துறை தேர்வு ; இந்தாண்டு 2.4 மில்லியன் வெள்ளி சேமிப்பு

புத்ராஜெயா, டிசம்பர் 1:

இன்று நடைபெறும் குடிவரவு தினத்துடன் இணைந்து, மலேசியாவின் குடி நுழைவுத்துறை தனது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறது என்று அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் டிசைமி டாவுட் தெரிவித்தார்.

இதில் இலத்திரனியல் கட்டணத்திற்கு (e-payment) மாறியதன் விளைவாக இந்த ஆண்டு 2.4 மில்லியன் வெள்ளியை சேமித்தது. அதாவது 100 விழுக்காடு இலத்திரனியல்-கட்டண சாதனையை எட்டிய முதல் அரசு நிறுவனம் என்ற விருதை சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் இருந்து நுழைவுத் திணைக்களம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

“2019 ஆம் ஆண்டில், குடிவரவுத் திணைக்களம் ரொக்கப் பணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தியது, இது வாடிக்கையாளர்கள் குடியேற்றம் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதில் வரிசையில் நிற்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு சிரமமாக இருந்தது.

“உதாரணமாக, ஒரு முதலாளி வெளிநாட்டுத் தொழிலாளியின் வரியான RM30,000 தொகையைச் செலுத்த விரும்பினால், அவர் வங்கிக்குச் சென்று, வங்கி சேவைக்காக வரிசையில் நிற்க வேண்டும், மேலும் அவர் குடி நுழைவுத்துறைக்குத் திரும்பும்போது மீண்டும் அவர் வரிசையில் நிற்க வேண்டும். ,” என்று குடிவரவு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனவே, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் நேரடி பரிமாற்றம் மூலம் வழக்கமான முறையை இலத்திரனியல்-பணம் செலுத்துவதற்கு மாற்றியதாக கைருல் டிசைமி கூறினார்.

அனைத்து முதலாளிகளும் அல்லது மலேசியர்களும் அனைத்துவிதமான கட்டணத்தையும் செலுத்த, வங்கி அட்டைகளை வைத்திருப்பதால் இந்த மாற்றத்தை எளிதாக செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

“இந்தத் திட்டத்தின் மூலம், கடைப்பிதழுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது பிற கட்டண ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும், மேலும் இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் விசா மற்றும் லெவி கொடுப்பனவுகள் போன்ற அனைத்து குடிநுழைவு பரிவர்த்தனைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டது என்றார்.

“தொடக்கத்தில் இது சவாலானதாக இருந்தது மற்றும் பணப்பரிமாற்றம் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாததால் நான் பொதுமக்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிலர் டெபிட் கார்டைக் இன்னொருவரிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது, ஆனாலும் நான் தொடர்ந்து வலியுறுத்தினேன், ஏனெனில் இந்த பணம் செலுத்தும் முறை ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

“அரசுத் துறைகள் (இ-பேமென்ட்) முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நிதி அமைச்சகம் மூன்று மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது குடி நுழைவுத்துறையின் ஒரு சாதனையாகும், புத்ராஜெயாவில் மட்டுமின்றி, சபாவில் உள்ள சம்போர்னா, சரவாக்கில் உள்ள மிரி மற்றும் தீபகற்பம் முழுவதும் இ-பேமெண்ட் முறை செயல்படுத்தப்படுவதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.

கைருல் டிசைமி மேலும் கூறுகையில், இந்த இலத்திரனியல் பணப்பரிமாற்றத்தால், இனி பாதுகாப்பு நிறுவனங்களின் சேவைகளை தினசரி அடிப்படையில் பணம் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை , மேலும் இந்த நடவடிக்கை சேமிப்பின் அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது என்றார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here