இந்தியா, மும்பையில் 2008ஆம் ஆண்டு தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மலேசியரான மறைந்த ஹேமலதா காசிப்பிள்ளை உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மலேசியாவிலுள்ள இந்திய தூதரகம் நேற்று (டிசம்பர் 9) பிரார்த்தனை கூட்டத்தை நடத்தியது.
விழாவில் கலந்துகொண்ட ஹேமலதாவின் கணவர் கே.சிவகுமாரன் கூறுகையில், 13 ஆண்டுகள் கடந்தாலும், 2008 நவ. 26ஆம் தேதி ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அந்த சோகமான நாளை தன்னால் நினைவுகூர முடிகிறது என்றார்.
எவரும் வெளியில் வர முடியாததால் ஹேமாவிடமிருந்து எந்த செய்தியும் இல்லை, நான் மும்பை வரை பறந்து சென்று அவளைத் தேட அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஹோட்டலில் அறைக்கு அறையாக என் மனைவியைத் தேடிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஹோட்டல் அறையில் இருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. ஒருவர் என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து வந்து அது என் மனைவி தங்கியிருந்த அறை அது என்று கூறினார்.
கிளப் அமானில் நடைபெற்ற பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி – “Shradanjali” என்ற தலைப்பில் நடந்த நிகழ்வில் சிவகுமாரன் உணர்ச்சிப்பூர்வமான உரையில், “கரிந்த உடலைப் பார்த்தேன், அதன் பிறகு நடந்தவை நினைவில் இல்லை” என்று கூறினார்.
இந்நிகழ்வில், முன்னாள் உள்துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமது, தென்கிழக்கு ஆசிய பிராந்திய பயங்கரவாத தடுப்பு மைய இயக்குநர் ஜெனரல் டத்தோ எஸ்.கணேசன், மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி, தூதரக அதிகாரிகள் மற்றும் சிவகுமாரனின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த ஹேமலதா, பணி நிமித்தமாக மும்பைக்கு வந்து, தாஜ்மஹால் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது இந்திய மண்ணில் மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹேமா வந்த ஒரு நாள் கழித்து நவம்பர் 26 அன்று இரவு பயங்கரவாதிகளின் கூட்டத்தால் ஹோட்டல் கைப்பற்றப்பட்டது.
172 பேர் கொல்லப்பட்ட மற்றும் 293 பேர் காயமடைந்தவர்களில் குறைந்தது 26 இந்தியர்கள் அல்லாத நாட்டவர்களில் ஹேமலதாவும் ஒருவராவார். அவருக்கு அப்பொழுது வயது 51. “காலம் காயங்களை ஆற்றும், ஆனால் வடுக்கள் எஞ்சியிருக்கின்றன” என்று கூறிய சிவகுமாரன், பயங்கரவாதச் செயல் ஒரு தீவிரமான பாதுகாப்புப் பிரச்சினையாகும். இது அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதால் அது கவனிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நூர் ஜஸ்லான் தனது முக்கிய உரையில், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மலேசியா விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தென்கிழக்கு ஆசியாவில் செயலற்ற போராளிக் குழுக்களுக்கு மன உறுதியை ஊட்டுவதாகவும், கவலையை ஏற்படுத்துவதாகவும் கூறினார். இரு பகுதிகளும் மீண்டும் ஒரு புதிய தளத்தை தேடும் பயங்கரவாத குழுக்களின் புகலிடமாக மாறும். தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அது தேசத்திற்கும் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் கேடு விளைவிப்பதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
























