அலோர் ஸ்டார், டிசம்பர் 10 :
கூலிமிலுள்ள பாடாங் செராய் தொழிற்சாலையில் 97 தொழிலாளர்கள் கோவிட்-19 பரிசோதனையில் வைரஸுக்கு சாதகமாக பதிலை பெற்றதைத் தொடர்ந்து, அத் தொழிற்சாலையில் கோவிட்-19 திரள் ஏற்பட்டுள்ள இடமாக அறிவிக்கப்பட்டது என்று கெடா சுகாதார இயக்குநர் டாக்டர் ஓத்மான் வாரிஜோ கூறினார்.
கூலிம், பாலிங், கோல முடா மற்றும் சிக் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அத்தொழிலாளர்களின் 36 குடும்ப உறுப்பினர்களும் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
“டிசம்பர் 9 நண்பகல் வரை, மொத்தம் 194 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் அதில் 97 தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் 36 அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட 133 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
“அனைத்து தொற்றுக்களும் லேசான அறிகுறிகளைக் காட்டியுள்ளன மற்றும் அவர்கள் அனைவருமே கோவிட் -19 தடுப்பூசியை முடித்துவிட்டனர் என்பதுடன் அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தொழிற்சாலையின் நிர்வாகம் தங்கள் ஊழியர்களை கோவிட் -19 பரிசோதனை செய்த பிறகே “பாடாங் மேஹா தொழில் பேட்டையில் கோவிட் -19 திரள் ” கண்டறியப்பட்டது என்று டாக்டர் ஓத்மான் கூறினார்.
மேலும் “வெடிப்புக்கான உண்மையான காரணத்தை அடையாளம் காண நாங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
தொழிற்சாலையின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மேலும் அதிக ஆபத்துள்ள இடங்களில் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) மேம்படுத்துமாறு அதன் நிர்வாகத்திற்கு கூறப்பட்டுள்ளதாக டாக்டர் ஓத்மான் கூறினார்.
























