மலாக்காவில் இந்த ஆண்டு இணைய மோசடியால் மொத்தம் RM17.98 மில்லியன் இழப்பு

மலாக்கா, டிசம்பர் 12 :

மலாக்காவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 767 இணைய மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள. இதன் காரணமாக மொத்தம் RM17.98 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் இணைய கொள்முதல், முதலீட்டு மோசடிகள், கடன்கள் மற்றும் பிரபலமான மக்காவ் மற்றும் காதல் மோசடிகள் ஆகியவை அடங்கும் என்று மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் மஜித் முகமட் அலி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 772 வழக்குகள் மூலம் RM15.9 மில்லியனாக இருந்த மொத்த இழப்புகள் இந்த ஆண்டு RM2.07 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“இதில் மக்காவ் மோசடிகளால் அதிக இழப்புகள் ஏற்பட்டன, 116 வழக்குகளில் இருந்து மொத்தம் RM5.97 மில்லியனும், அதைத் தொடர்ந்து முதலீட்டு மோசடி, மொத்தம் RM5.307 மில்லியன் இழப்புகள் கொண்ட 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.”

“இதற்கிடையில், நவம்பர் வரை 70 காதல் மோசடிகள் RM2.553 மில்லியன் இழப்புகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து கடன்கள் (RM2.231 மில்லியன்) மற்றும் இணைய கொள்முதல் சம்பந்தப்பட்ட 205 வழக்குகள் (RM1.916 மில்லியன்) பதிவாகின,” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கு முன்னதாக, நேற்று இங்குள்ள ஜோங்கர் தெருவில் மோசடி விழிப்புணர்வு சமூக நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தவும், குற்றங்களைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கவும் சமூகத் தலைவர்களிடையே முகவர்களை நியமிப்பது போன்ற புதிய அணுகுமுறையைக் காவல்துறை கடைப்பிடித்துள்ளது என்றும் அப்துல் மஜித் கூறினார்.

இந்த நடவடிக்கையானது சமூகங்களுக்கிடையில் பரப்பப்பட வேண்டிய குற்றத்தடுப்பு உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வதும், ஆலோசனைகளை வழங்குவதிலும் பொதுமக்களுக்குக் கல்வி அளிப்பதிலும் முகவர்கள் போலீஸ் பேச்சாளர்களாகச் செயல்படுவதையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

“இது எங்களின் முதல் திட்டமாகும், சுற்றுலா மாநிலமாக மலாக்காவில் அமைதி மற்றும் பொது ஒழுங்கை மேம்படுத்துவதில் அணுகுமுறை வெற்றிகரமாக இருந்தால், காவல்துறைக்கு உதவும் வகையில் முகவர்களை நியமிக்கும் கருத்தை நாங்கள் விரிவுபடுத்துவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

-பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here