லாங் டைகர் உள்ளிட்ட மேலும் மூன்று பேருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்

ஜோகூர் பாரு: கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் இருந்தபோது போலீஸ் காவலில் இருந்து தப்பிய “லாங் டைகர்” என்று அழைக்கப்படும் ரோஹிங்கியா இனத்தவருக்கு எதிராக புதன்கிழமை (டிசம்பர் 29) இங்குள்ள தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது.

அப்துல் ஹமீம் அப் ஹமிட் 32, ஆகியோருக்கு எதிரான தடுப்பு உத்தரவை, மாஜிஸ்திரேட் அனலியா கமருதீன் பிறப்பித்தார். மேலும் அப்துல் ஹமீமின் கூட்டாளிகளாக கருதப்படும் 36, 38 மற்றும் 46 வயதுடைய மூன்று நபர்களுக்கு எதிராகவும் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்தார்.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 28) கெடாவில் மீண்டும் கைது செய்யப்பட்ட அப்துல் ஹமீம், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 223/224 இன் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார். அதே நேரத்தில் மூன்று நபர்களின் தடுப்புக் காவல் அதே சட்டத்தின் 216 ஆவது பிரிவின் கீழ் அடைக்கலம் கொடுத்ததற்காக செய்யப்பட்டது.

நேற்று, கெடாவில் பிற்பகல் 3 மணியளவில் அப்துல் ஹமீம் மீண்டும் கைது செய்யப்பட்டதாக காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அதே நீதிமன்றத்தில் மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக அப்துல் ஹமீம் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பிற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here