நிலச்சரிவை அடுத்து 17 வணிக வளாகங்கள் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவு

செர்டாங், ஶ்ரீ கெம்பாங்கன் அருகே லெஸ்தாரி பெர்டானாவில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 17 வணிக வளாகங்கள் தற்காலிகமாக செயல்படுவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

MPSJ பொறியியல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஆலோசனையின் பேரில் செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.ஏ.அன்பழகன் இந்த உத்தரவு பிறப்பித்ததாக சுபாங் ஜெயா நகர சபை (எம்பிஎஸ்ஜே) தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று MBSJ இன் வர்த்தக மற்றும் மேலாண்மை துறை துணை இயக்குனர் அஸ்பரிசல் அப்துல் ரஷீத் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

நேற்று, மாலை 6.40 மணியளவில் அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் பகுதியைச் சுற்றியுள்ள நிலம் இடிந்து விழுந்ததால், ஐந்து வாகனங்கள் வாய்க்காலில் மூழ்கின. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அப்போது பெய்த மழையால் வடிகால் உடைந்து கீழே உள்ள மண் குறையத் தொடங்கியது. இதனால் ஐந்து கார்கள் 5 மீட்டர்  முதல் 6 மீட்டர் வரையிலான ஆழத்தில் விழுந்தன என்று செர்டாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி சஹாருடின் அப்துல் ரசாக் கூறினார்.

நிலச்சரிவு ஏற்பட்ட மலை முகடுக்கு அருகில் உள்ள வேலையிடங்களுக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார். நேற்றைய இடத்திலிருந்து 50 மீ தொலைவில் 2017 ஆம் ஆண்டு இதே பகுதியில் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக சஹாருடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here