ஈப்போவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 305 புகார்களை போலீஸ் பெற்றுள்ளது

ஈப்போ, பிப்ரவரி 2 :

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈப்போவின் பல பகுதிகளைத் தாக்கிய சூறாவளி போன்ற புயலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, இதுவரை 305 புகார்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைமை துணை ஆணையர் யஹாயா ஹாசன் இதுபற்றிக் கூறும்போது, சம்பவம் குறித்து இன்னும் புகார் அளிக்காத பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இன்று திவான் தாவாஸில், சமீபத்திய புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண மையத்தில் “மலேசிய குடும்பம் ‘Musa’ படையின் பங்களிப்பை வழங்கும் நிகழ்ச்சியின் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்” என்று  கூறினார்.

குடியிருப்பாளர்களின் வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவு மற்றும் ரோந்து வாகனப் பிரிவின் பணியாளர்களும் கடமையிலுள்ளதாக யாஹாயா கூறினார்.

“திருட்டுகள் குறித்து இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் தாமான் தேசா ஸ்ரீ செபோர், கம்போங் தாவாஸ், தாமான் தாசெக் டாமாய் மற்றும் கம்போங் ஸ்ரீ கிளேபாங் தம்பஹான் ஜெயாவைத் தாக்கிய சூறாவளி போன்ற ஃப்ரீக் புயலின் போது நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

பல மரங்கள் வேரோடு சாய்ந்தன, மேலும் சில மின்கம்பங்கள் சரிந்து அல்லது சேதமடைந்தன. எனினும், இந்த சம்பவத்தில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here