வெட்டிய மனைவியின் தலையுடன் வீதி உலா வந்த கணவர்!

தெஹ்ரான், பிப்ரவரி 9 :

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் மனைவியின் தலையை துண்டித்து அதனுடன் தெருவில் சென்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் இடம்பெற்றுள்ளது.

ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில் மோனா ஹெய்டாரி,(17) என்ற பெண். அவரது கணவர் மற்றும் மைத்துனரால் கொல்லப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர் என்று ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை போலீஸ் அதிகாரிகள் இருவரையும் அவர்களின் மறைவிடத்தில் நடத்திய சோதனையின் போது கைது செய்தனர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகும் போது வெறும் 12 வயதுதான், மேலும் கொலை செய்யபட்ட அவருக்கு மூன்று வயது மகன் உள்ளார்.

ஈரானில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது பெண்களுக்கு 13 வயது மற்றும் ஆண்களுக்கு 15 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெய்டாரியின் கொலையைத் தொடர்ந்து, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களைச் சீர்திருத்தவும், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்தவும் கோரிக்கைகள் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த வழக்கு குறித்து ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணைத் தலைவரான என்சீஹ் கசாலி, “அவசர நடவடிக்கைகளை” எடுக்குமாறு நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

சக நாடாளுமன்ற உறுப்பினர் எல்ஹாம் நடாப் கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை செயல்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால், இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் காண்கிறோம்.” என்றார்.

ஈரானிய செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த கொலையின் மீது அதிர்ச்சி மற்றும் கோபத்தின் வெளிப்பாட்டை தெரிவித்துள்ளன. இதுகுறித்து, சீர்திருத்தவாதி நாளிதழான சசாண்டேகி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

“நபர் ஒருவர் பெண்ணின் தலை துண்டித்து அதை தெருக்களில் காட்டி பெருமிதம் கொண்டார், இப்படிப்பட்ட சோகத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மீண்டும் பெண் கொலைகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

வழக்கறிஞர் அலி மொஜ்தாஹெட்சாதே சீர்திருத்தவாத பத்திரிகையான ஷார்க்கில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளே கௌரவக் கொலைகளுக்கு வழி வகுப்பதாக குற்றம் சாட்டினார்.

மே 2020 இல், இதே போன்று ஒரு நபர் தனது 14 வயது மகளின் தலையை துண்டித்து “கௌரவக் கொலை” என்று அழைத்தார், இது பொதுமக்களின் கடும் கோபத்தை தூண்டியது. அதன்பின் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here