கம்போங் லோங் பாசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 30 வீடுகள் பாதிப்பு

கோத்தா கினாபாலு, பிப்ரவரி 20 :

நேற்று நண்பகல் முதல் அப்பகுதியில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, சிபிடாங்கின் கம்போங் லோங் பாசியாவில் உள்ள 30 வீடுகள் இன்று திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சபா பேரிடர் மேலாண்மை குழு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நண்பகல் சுமார் 2 மணிக்கு தொடங்கிய, தொடர் மழையால் இன்று அதிகாலை வரை சுங்கை லோங் பாசியா கிராமப் பகுதியில் வெள்ளம் நிரம்பி வழிகிறது.

“சுங்கை லோங் பாசியாவின் நீர்மட்டம் உயர்ந்ததற்கு, சுங்கை படாஸ் தேனோமில் இருந்து வெள்ள நீர் கலப்பதே காரணம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இன்று பிற்பகல் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும், சுங்கை லோங் பாசியாவில் நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்போங் லோங் பாசியாவில் சுமார் 700 குடியிருப்பாளர்கள் உள்ளனர். மேலும் இப்பகுதி கோத்தா கினாபாலுவிலிருந்து தென்மேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் மாலிக்கான் மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இதுவரை இப்பகுதியில் எந்த தற்காலிக நிவாரண மையமும் (PPS) திறக்கப்படவில்லை என்றும், தற்போது நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே ஜாலான் லோங் பாசியா-மாலிக்கானை கடந்து செல்ல முடியும் என்றும் அது கூறியது.

“பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு நாளை நான்கு சக்கர வாகனங்கள் மூலம் உணவு கூடைகள் விநியோகிக்கப்படும்” என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here