கோலாலம்பூர்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்களுக்கு மேல் நீடித்தால், இந்த ஆண்டு எரிபொருள் மானியமாக 28 பில்லியன் வெள்ளியை அரசாங்கம் வழங்க வேண்டியிருக்கும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் கூறினார். கடந்த ஆண்டு எரிபொருள் மானியத்திற்காக 11 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது என்றார்.
இன்று மக்களவையில் Wong Hon Wai (PH-Bukit Bendera) கேட்ட கேள்விக்கு பதிலளித்த தெங்கு ஜஃப்ருல், உக்ரைனில் ஏற்பட்ட மோதலால் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு US$100 ஆக உயர்ந்துள்ளது. இது 2014க்குப் பிறகு மிக அதிகமான விலை உயர்வாகும்.
இந்த விலை உயர்வுடன், பெட்ரோல், டீசல் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுக்கான மானிய விகிதம் மாதத்திற்கு 2.5 பில்லியன் வெள்ளியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு US$100க்கு மேல் இருந்தால், 2021ஆம் ஆண்டிற்கான RM11 பில்லியனுடன் ஒப்பிடும்போது 2022ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த மானியச் செலவு RM28 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நுகர்வோர் RON95 பெட்ரோலுக்கு RM2.05 மட்டுமே செலுத்துகிறார்கள். ஆனால் மார்ச் மாதத்தில் உண்மையான விலை லிட்டருக்கு RM3.70ஐ எட்டியுள்ளது. இதன் பொருள் ஒரு லிட்டருக்கு 1.65 வெள்ளி விலை வித்தியாசத்தை அரசாங்கம் மானியமாக வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.