போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படும் மூன்று மலேசியர்கள் சிங்கப்பூரில் கைது!

சிங்கப்பூர், மே 21 :

கடந்த புதன்கிழமை (மே 18) உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் சுமார் 17,704 கிராம் ஹெரோயின், 261 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 2 கிராம் ‘எக்ஸ்டஸி’ மாத்திரைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் மூன்று மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிவரவு & சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (CNB) அடுத்தடுத்த அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர், இதில் கடந்த இரண்டு நாட்களில் 23 முதல் 28 வயதுடைய மலேசிய போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்களை, சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் கைது செய்தனர்.

“கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் S$1,295,000 மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இதை 8,430 ஹெரோயின் போதைப்பித்தர்கள் மற்றும் 150 ‘ஐஸ்’ போதைப்பித்தர்கள் ஒரு வாரத்திற்கு பயன்படுத்த போதுமானது” என்று ICA மற்றும் CNB ஆகியவைவெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தன.

மே 18ஆம் தேதி மாலை, மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட கார் வருகை பகுதியில் குடிவரவு அனுமதி பாதையில் நுழைந்து, வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

“காரின் பின்பக்கத்தில் (boot) சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 28 வயதான மலேசிய ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக CNB க்கு அனுப்பப்பட்டார், ”என்று அது மேலும் கூறியுள்ளது.

இதற்கிடையில், மே 19 ஆம் தேதி அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையில், பெடோக் நோர்த் ஸ்ட்ரீட் 1க்கு அருகாமையில் இரண்டு மலேசியர்களை CNB அதிகாரிகள் கைது செய்ததாக அந்த அறிக்கை கூறியது.

“குறித்த இருவரும் அந்த போதைப்பொருள் பொட்டலங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கம் பெற்றவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது,” என்று அது மேலும் கூறியது.

போதைப்பொருள் நடவடிக்கைகள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here