மின்னஞ்சல் மூலம் RM3.9 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

கோலாலம்பூர், ஜூன் 14 :

மின்னஞ்சல் மூலம் RM3.9 மில்லியன் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 43 வயதான நைஜீரிய நாட்டு ஆடவரும், அவரது 41 வயது மலேசிய மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர்,டத்தோ முகமட் கமாருடின் முகமட் டீன் அவர்களின் கூற்றுப்படி, business email compromise (BEC) என அறியப்படும் இந்த வணிக மோசடிக்கு சந்தேக நபர்களே பொறுப்பு என்று போலீசார் நம்புவதாகக் கூறினார்.

“இந்த ஊழல்காரர்களால் குறிவைக்கப்பட்ட துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடமிருந்து ஜூன் 8 அன்று எங்களுக்கு ஒரு அறிக்கை கிடைத்தது.

“அவரது நிறுவனம் 41,000 மெட்ரிக் டன் சிமெண்ட் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் வணிகத்தை கையாண்டது. சந்தேக நபர்கள் அமெரிக்க நிறுவனத்தின் மின்னஞ்சலை ஊடறுப்புச் செய்து, பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொண்டு, RM3.9 மில்லியனை தமது கட்டுப்பாட்டிலுள்ள மலேசிய வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு அறிவுறுத்தியதாக நாங்கள் நம்புகிறோம். ,” என்று இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) சிசிஐடி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

விசாரணைக்காகநேற்று (ஜூன் 13) செமினியில் உள்ள ஈகோ மெஜஸ்டிக்கில் சந்தேகத்திற்குரிய இருவரையும் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநர்களுக்கு சொந்தமானது என நம்பப்படும் ” ஒரு Mercedes Benz கார் , ஒரு Proton Exora கார் , 6 மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள், நகைகள் மற்றும் பல ஆவணங்களை நாங்கள் கைப்பற்றினோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக, போலி வங்கி கணக்கு என நம்பப்படும் கணக்கில் இருந்த RM1.8 மில்லியனையும் போலீசார் முடக்கியுள்ளனர்.

“இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் நைஜீரியாவில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் மலேசியாவில் வேறு யாரவது இக்கும்பலுடன் தொடர்பில் உள்ளனரா என்றும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், என்றார்.

“பொதுமக்கள், குறிப்பாக வணிகங்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் பரிவர்த்தனைகளில் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

“பெறப்பட்ட மின்னஞ்சல்கள் உண்மையில் அவர்களின் வணிகத் தொடர்புகளிலிருந்து வந்தவை என்பதைச் சரிபார்க்கவும், மேலும் பணம் செலுத்தும் நோக்கங்களுக்காக வங்கிக் கணக்குகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும் மக்களை நாம் அறிவுறுத்துகிறோம் என்றார்.

“மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக, பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் மாற்றம் இருந்தால் வணிகத் தொடர்புகளை நேரடியாக மேற்கொள்ளுமாறும் கட்டுக்கொள்கிறோம் ” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மொத்தம் RM49.2 மில்லியன் மதிப்புள்ள 57 BEC வழக்குகள் பதிவாகியுள்ளன என்று முகமட் கமாருடின் கூறினார். அத்தோடு இந்த ஆண்டு ஜூன் 13 வரை, RM15.1 மில்லியன் இழப்புகள் சம்பந்தப்பட்ட 23 வழக்குகள் பதிவாகியுள்ளன,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here