செப்பாங், ஜூன் 19 :
கடந்த வியாழன் (ஜூன் 16) முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 16 வயது வாலிபர் அலி இம்ரான் நசாருதீன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஞாயிறு (ஜூன் 19) அதிகாலை 3.05 மணியளவில், அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் ரோந்துப் பணியாளர்கள் 16 வயது சிறுவனை ஜாலான் செராயா கம்போங் மலாயு அம்பாங்கில் கண்டுபிடித்ததாக, செப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.
மேலும், “சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான், அவன் பத்திரமாக இருக்கிறான்” என்று அவர் கூறினார்.
அலி இம்ரானை அவரது தாயார் வான் எசுரியாண்டி வான் அஹ்மட் பள்ளிக்கு எழுப்ப விரும்பியபோது, அதிகாலை 5.30 மணியளவில் அவரது அறையில் இருந்து அவர் காணாமல் போனார்.
வியாழன் அதிகாலை, 3.57 மணிக்கு பண்டார் புக்கிட் புச்சோங் 2 இல் உள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து, கடைசியாக அந்தப்பையன் தனியாக நடந்து செல்வதை ஒரு இளம்பெண் கண்டதாக, வான் கமாருல் அஸ்ரான் முன்பு கூறியிருந்தார்.
தனது மகன் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதாக சிறுவனின் தாய் கூறினார்.
“ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில், நாங்கள் எங்கள் அன்புக்குரிய மகன் அலி இம்ரானுடன் மீண்டும் இணைந்துள்ளோம். வார்த்தைகளால் எங்கள் உணர்ச்சிகளை விவரிக்க முடியாது, எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய ஆசீர்வாதம் மற்றும் அதிசயம் எங்கள் மகன்’ என்று அவரின் தாயார் கூறினார்.
“அலியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எங்களுக்கு உதவிய எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் இதய பூர்வமான உயர்வான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அலி இப்போது சற்று மந்தமாக இருந்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்று அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் செப்பாங் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்தார்.





















