வெள்ளத்தில் மூழ்கிய சிட்னி நகரம்- வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு மக்களுக்கு உத்தரவு

சிட்னி, ஜூலை 3:

ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சிட்னியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால், சிட்னி நகரம் முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் கடுமையான வெள்ளத்தில் மூழ்கிய மேற்கு சிட்னியில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் சிட்னியின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான கேம்டனில், கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசரகால் சேவை துறை அமைச்சர் ஸ்டெபனி குக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது உயிருக்கு ஆபத்தான அவசர நிலை. வரவிருக்கும் நாட்களில் மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் குறுகிய அறிவிப்பில் வீடுகளை விட்டு வெளியேற தயாராக இருக்க வேண்டும். மேலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய சிட்னியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வசிப்பவர்கள், மோசமான வானிலை காரணமாக தங்கள் பள்ளி விடுமுறை பயணத் திட்டங்களை ரத்து செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்று எச்சரித்தார்.

அவசரகால சேவைகள் மூலம், 29 இடங்களில் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன மற்றும் கடந்த 24 மணி நேரத்தில், அவசரகால சேவைப்பிரிவுக்கு 1,400க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here