எதிர்பார்ப்பைக் கூட்டும் 2022 மஹா கண்காட்சி

மலேசிய விவசாயம், தோட்டக் கலை, விவசாயச் சுற்றுலா (மஹா) கண்காட்சியானது கடந்த 1923ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கண்காட்சி தனக்கென ஒரு வரலாற்றைக்கொண்டுள்ளது. அதிலும் இன்று அறியப்படும் அமைச்சின் கீழ் இடம்பெற்றுள்ளது வரையில் இந்தக் கண்காட்சி பல்வேறு நிலையிலான உருமாற்றங்களைக் கண்டுள்ளது.
ஈராண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தக் கண்காட்சியானது விவசாயம், விவசாயம் சார்ந்த சுற்றுலா போன்ற அம்சங்களை முன்னிலைப்படுத்தினாலும் மலேசியாவின் முன்னேற்றத்தையும் அடைவுநிலையையும் பிரதிபலிக்கும் தேசியக் கட்டமைப்பில் ஓர் அங்கமாக வளர்ச்சிபெற்றுள்ளது.
பொதுவாக தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் விவசாயம் சம்பந்தப்பட்ட புதிய தயாரிப்புகள் (உள்நாடு – வெளிநாடு), அந்தத் துறைக்கு உதவும் வல்லமைகொண்ட சந்தை, உற்பத்தி வியூகங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கண்காட்சி இதுவாகும்.
இறுதியாக இக்கண்காட்சி கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. அந்த ஆண்டு கண்காட்சியில் 3.3 மில்லியன் வருகையாளர்கள் பங்கேற்ற நிலையில் மொத்தமாக 215 மில்லியன் ரிங்கிட் விற்பனையும் பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் 2022 மஹா கண்காட்சி அடுத்த மாதம் 4ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரையில் செர்டாங் மெப்ஸ் மாநாட்டு மையத்தில் நடத்தப்படுகின்றது. இருப்பினும் தற்போதைய கோவிட்-19 தொற்றுப் பரவல் சுழல், நாடு எண்டமிக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது ஆகிய அம்சங்களைக் கவனத்தில் கொண்டு இம்முறை கண்காட்சி சுழ்நிலைக்கு ஏற்ப நடத்தப்படுகிறது.
நேரடி முறையாகவும் மெய்நிகர் முறையாகவும் இருநிலைகளில் (ஹைபிரிட்) நடத்தப்படுகின்றது. இந்தக் கண்காட்சி நடத்தப்படும் காலகட்டம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய எஸ்ஓபி விதிமுறைகளை உறுதிப்படுத்துவதில் விவசாய, உணவுத்துறை அமைச்சு அக்கறைகொள்கிறது.
இந்த 2022 மஹா கண்காட்சியானது அமைச்சு முன்வைத்துள்ள பல இலக்கினை அடைவதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக வர்த்தக ஏற்பு நடவடிக்கை, விவசாய உணவுத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்தைப் பிரபலப்படுத்துதல், உள்நாட்டு – வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ற தளத்தை ஏற்படுத்தித் தருவதோடு அதன் வழித்தடத்தையும் விளக்குவது, விவசாய வர்த்தகத் துறையில் இளம் தலைமுறையினர் ஈடுபடுவதை ஊக்குவிப்பது, கார்ப்பரேட்- தொழில்துறையினரின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் வழி மிகச்சிறந்த விவசாய – வர்த்தகக் கண்காட்சியாக இந்த மஹா கண்காட்சியை நிலைப்படுத்துதல், தோட்டத் தொழில்துறையினர் – கால்நடை வளர்ப்பாளர்கள், மீனவர்களுக்கு இந்த விவசாயம் சார்ந்த துறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை அந்த இலக்குகளாகும்.
இந்நிலையில் கார்ப்பரேட் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அமைச்சுகள், இலாகாக்கள், மத்திய – மாநில அளவிலான அரங்சாங்க அமைப்புகள், விவசாயத் தொழில் முனைவர்கள், சிறு – நடுத்தர தொழில்முனைவர்கள், உள்நாட்டு – வெளிநாட்டு ஆய்வு மையங்கள், பொருளாதார மையங்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட பிரிவினர் இம்முறை மஹா கண்காட்சியில் கலந்துகொள்வார்கள் என்ற இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை கண்காட்சியில் இடம்பெறும் அங்கங்களுக்கு ஏற்ப 1,500 கண்காட்சி – விற்பனை முகப்பிடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் 2022 மஹா கண்காட்சியானது புதிய வழமைக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் நடத்தப்படுகின்றது. இந்த மாற்றங்களானது புதிய அனுபவங்களை வழங்குவதோடு மட்டுமன்றி விவசாய – உணவுத் தொழில்துறையில் தொழில்நுட்பத்தின் மேம்பாட்டையும் வெளிக்காட்டுகின்றது.
குறிப்பாக வர்த்தக ஏற்பு நடவடிக்கை அம்சங்கள், மாநாடு – கருத்தரங்குகளை மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்தல், மெய்நிகர் முறையிலான முகப்பிடங்கள் கண்காட்சிக்கான அனுமதி ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here